ஜோலார்பேட்டை தொகுதி மக்களிடம் அதிருப்தி: அமைச்சர் வீரமணிக்கு வாக்குகள் குறைந்தன

ஜோலார்பேட்டை தொகுதி மக்களிடம் அதிருப்தி: அமைச்சர் வீரமணிக்கு வாக்குகள் குறைந்தன
Updated on
1 min read

கடந்த தேர்தலைக் காட்டிலும், குறைவான வாக்குகள் வித்தியாசத் தில் பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் வீரமணி வெற்றி பெற்றார்.

வேலூர் மாவட்டத்தில் நாட்றம்பள்ளி தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர், ஜோலார்பேட்டை தொகுதியாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் முதல்முறையாக மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த கே.சி.வீரமணி போட்டியிட்டார்.

தொகுதியில் தனக்கென இருந்த தனிச்செல்வாக்கு மூலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜி.பொன்னுசாமியை விட 22, 936 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கே.சி.வீரமணி வெற்றி பெற்றார். எம்எல்ஏவாக பதவியேற்ற 2 -வது ஆண்டில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரானார். பின்னர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தொடர்ந்து பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஜோலார்பேட்டை தொகுதியில் கே.சி.வீரமணி போட்டியிட்டார். அமைச்சராக இருப்பதால், வீரமணியின் வெற்றி தேர்தலுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டது. இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அதிமுகவினர் கூறிவந்தனர்.

ஆனால், தொகுதியில் வாக்கு சேகரிப்பில் அமைச்சர் வீரமணி ஈடுபட்டபோது, இந்த முறை வெற்றி பெறுவோமா ? என்ற சந்தேகம் அதிமுகவினர் இடையே ஏற்பட்டது. தொகுதி மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியால் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிடுவார் என்ற பேச்சு பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் வெற்றிக்கான வியூகங்களை அமைச்சர் வீரமணி மேற்கொண்டார்.

அதன்படி, இந்த தேர்தல் திமுக வேட்பாளர் கவிதா தண்டபாணியை அவர் 10,991 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தொகுதிக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத திமுக வேட்பாளர் கவிதா தண்டபாணி 71,534 வாக்குகள் பெற்று அதிமுகவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

கடந்த தேர்தலில் அமைச்சர் வீரமணி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் தொகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, “ ஜோலார்பேட்டை தொகுதியில் பேருந்து நிலையம், தொழிற்சாலை, அரசு மருத்துவமனை, வேலை வாய்ப்பு என மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதாக கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வீரமணி வாக்குறுதி அளித்தார். பின்னர் அமைச்சரான அவர், வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை. குறிப்பாக, குடிநீர், சாலை, மின்விளக்கு என அடிப்படை வசதிகளை கூட செய்து தரவில்லை. இதன் காரணமாகவே, வீரமணிக்கு எதிரான வாக்குகள் மற்ற கட்சிகளுக்கு விழுந்தன. இனியாவது மக்களை சந்திக்காமல், வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால் அடுத்த தேர்தலில் சரியான பாடம் புகட்டுவோம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in