Published : 04 May 2022 10:41 AM
Last Updated : 04 May 2022 10:41 AM

பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளை நிர்வகிக்க தனி அலுவலரை நியமிக்கவும்: ராமதாஸ்

ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளை நிர்வகிக்க தனி அலுவலர் ஒருவரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் காங்கிரஸ் அல்லாத முதல் முதல்வர் பேரறிஞர் அண்ணா, மக்களவைத் தலைவர் அனந்தசயனம் அய்யங்கார், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் பல்துறை வல்லுனர்களை வழங்கிய சென்னை பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகள் மோசமான நிர்வாகம் காரணமாக சீரழிவை சந்திக்கத் தொடங்கியுள்ளன. தமிழகத்தின் மிகப்பெரிய கல்வி நிறுவனத்தின் சீரழிவை தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது.

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்று பாரதி பாடுவதற்கு முன்பே, நாற்பது வயதுக்குள்ளாக தாம் ஈட்டிய சொத்துக்களைக் கொண்டு கல்வி நிறுவனங்களை நடத்த வேண்டும் என்று உயில் எழுதி வைத்தவர் வள்ளல் பச்சையப்ப முதலியார். அவரது உயிலின்படி அமைக்கப்பட்ட பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய நகரங்களில் ஆறு கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு சில குறைகள் இருந்தாலும், அவற்றை தேர்ந்தெடுக்கப்பட்ட அறக்கட்டளை நிர்வாகம் இயன்றவரை சிறப்பாகவே நடத்தி வந்தது.

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அறங்காவலர்களின் பதவிக்காலம் கடந்த 2018 ஆண்டு நிறைவடைந்த நிலையில், பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால், தேர்தலை நடத்த முடியாத சூழல் உருவானதைத் தொடர்ந்து, அறக்கட்டளை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தின் சொத்தாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட நீதிபதி எஸ்.ராஜு கடந்த 21.06.2021 முதல் சொத்தாட்சியராக பொறுப்பேற்று அறக்கட்டளையை நிர்வகித்து வருகிறார். பச்சையப்பன் அறக்கட்டளை தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 30.11.2021 அன்று அளித்த தீர்ப்பில் அடுத்த 10 வாரங்களுக்குள், அதாவது 08.02.2022-க்குள் அறக்கட்டளைக்கு தேர்தல் நடத்தி புதிய அறங்காவலர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க ஆணையிட்டிருந்தது.

ஆனால், கெடு முடிந்தும் அறக்கட்டளைக்கு தேர்தல் நடத்தப்படாதது மட்டுமின்றி நிர்வாகமும் நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது. சொத்தாட்சியர் ராஜு அவரது பணிச்சுமை காரணமாக நிர்வாகத்தில் கவனம் செலுத்தாத நிலையில், அவருக்கு முன் சொத்தாட்சியராக இருந்த நீதிபதி முருகன் அவர்களால் நியமிக்கப்பட்ட அறக்கட்டளை செயலாளர் துரைக்கண்ணு வைத்தது தான் சட்டமாகி விட்டது. தமக்கு ஆதரவான குழு ஒன்றை ஏற்படுத்திக் கொண்ட அறக்கட்டளை செயலாளர், கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள், பிற பணியாளர்களை இழிவுபடுத்தியும், அவமானப்படுத்தியும் வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமக்கு ஒத்துவராத ஆசிரியர்களையும், பிற பணியாளர்களையும் சென்னையிலிருந்து கடலூர், கடலூரில் இருந்து காஞ்சிபுரம், காஞ்சிபுரத்திலிருந்து சென்னை என பணியிட மாற்றம் செய்து பந்தாடுகிறார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு கடந்த பல மாதங்களாக ஊதியம் கூட வழங்கப்படவில்லை. பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 200-க்கும் மேற்பட்டோருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதற்கான பட்டியலை வழங்கினால் உடனடியாக பதவி உயர்வு வழங்கத்தயார் என்று கல்லூரிக் கல்வி இணை இயக்குனரும் அறக்கட்டளை செயலருக்கு கடிதம் எழுதினார். பதவி உயர்வு வழங்கப்படவுள்ள ஆசிரியர்களின் பட்டியலை கல்லூரிக் கல்வி இணை இயக்குனருக்கு அனுப்பும்படி சொத்தாட்சியரும் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அதை செய்ய செயலர் மறுக்கிறார். மாறாக தமக்கு ஆதரவாக செயல்படும் குழுவினரைக் கொண்டு கல்லூரிக் கல்வி இணை இயக்குனரை விமர்சித்தும், 152 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் சுவரொட்டிகளை ஒட்டச் செய்துள்ளார்.

இதைக் கண்டித்து தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளது. கல்லூரிகளின் தேவை, மாணவர்களின் தேவை குறித்து முறையிடச் செல்லும் கல்லூரி முதல்வர்களை அறக்கட்டளை செயலாளர் அடிமைகளைப் போல நடத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து அறக்கட்டளை செயலாளரை சந்தித்து பேச தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் முயன்ற போது அவர்களை சந்திக்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சீரழிவுகள் எதையும் சொத்தாட்சியர் கண்டுகொள்ளவில்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும். பணிச்சுமை காரணமாக அறக்கட்டளை குறித்த அனைத்து விஷயங்களையும் செயலருடன் பேசிக் கொள்ளும்படி சொத்தாட்சியர் கூறுகிறார். ஆனால், செயலரோ தன்னை சொத்தாட்சியரை விட அதிகாரம் படைத்தவராக கருதி, அனைவரையும் அவமதித்துக் கொண்டும், அறக்கட்டளையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்.

பச்சையப்பன் அறக்கட்டளையின் தலைவராக திருமலைப் பிள்ளை, ஏ.எல். முதலியார், எம்.ஏ.முத்தையா செட்டியார், டி.என்.சேஷன் போன்றவர்கள் பொறுப்பு வகித்துள்ளனர். அவர்களில் எவரும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை மரியாதைக் குறைவாக நடத்தியதில்லை. ஆனால், அவர்களை விட அதிகாரம் படைத்தவராக செயலர் நடந்து கொள்வது தான் சிக்கலுக்கு காரணம் என்பதை அரசு உணர வேண்டும்.

இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, சொத்தாட்சியர் மூலமாக பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளின் ஆசிரியர்கள் மீது செயலாளர் மேற்கொண்ட நடவடிக்கைகளை ரத்து செய்வதுடன், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வையும் உடனடியாக வழங்க வேண்டும். தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் 14(அ) பிரிவின்படி பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளை நிர்வகிக்க தனி அலுவலர் ஒருவரையும் தமிழக அரசு நியமிக்க வேண்டும். அறக்கட்டளை தேர்தலை விரைந்து நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x