Published : 04 May 2022 04:45 AM
Last Updated : 04 May 2022 04:45 AM
மதுரை: மகரிஷி சரகர் உறுதிமொழி எடுத்த அனைத்து மருத்துவக் கல்லூரி டீன்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்தார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் சம்ஸ்கிருத உறுதிமொழியை மொழிபெயர்த்துப் படித்த விவகாரத்தில் டீன் ரெத்தினவேலு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தலைமையில் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தா ராம் ஆகியோர் நேற்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு விசாரணைக்கு வந்தனர்.
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட டீன் ரெத்தினவேலு, துணை முதல்வர் தனலெட்சுமி மற்றும் மாணவர் அமைப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் விழாவில் நடந்த விவரத்தை எழுதிக் கொடுத்தனர்.
விசாரணைக்குப் பிறகு மருத்துவக் கல்வி இயக்குநர் செய்தியாளர்களிடம் கூறியது:
டீன், துணை முதல்வர் மற்றும் மாணவர் அமைப்பினரிடம் விசாரித்தோம். இருவரும் கவனக்குறைவாக இருந்துவிட்டதாகக் கூறினர். அந்த விவரங்களை அறிக்கையாக தயார் செய்து அரசுக்கு அனுப்புவோம். பாரம்பரியமாக உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கிறோம். நான் உட்பட அனைத்து மருத்துவர்களுமே இந்த உறுதிமொழியை எடுத்துதான் பணிக்கு வந்துள்ளோம். காலம்காலமாக எடுக்கும் உறுதிமொழியை மாற்றுவதற்கு முன் சுகாதாரத் துறைச் செயலர், மருத்துவக் கல்வி இயக்குநரிடம் கேட்டு தெளிவு பெற்றிருக்கலாம்.
தேசிய மருத்துவக் கவுன்சில் மகிரிஷி சரகர் உறுதிமொழியைப் பரிந்துரைத்து சுற்றறிக்கை மட்டுமே அனுப்பியது. உத்தரவு போடவில்லை. அதனால், சுகாதாரத் துறை, மருத்துவக் கல்வி இயக்குநரகம் அனுப்பும் சுற்றறிக்கை, உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும், மற்றவற்றைப் பின்பற்றக் கூடாது என பிப்.11-ல் சுகாதாரத் துறைச் செயலர் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். அந்த அறிக்கையை அனைத்துக் கல்லூரி முதல்வர்களும் பார்த்து அதற்கு சரி என்று பதிலும் அனுப்பியிருந்தனர்.
அப்படி இருக்கையில் இப்படியொரு தவறு நடந்திருக்கிறது. விசாரணை அறிக்கையை அரசின் பார்வைக்குக் கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்:
பிப். 11-ல் சுகாதாரத்துறைச் செயலர் அனுப்பிய சுற்றறிக்கை கரோனா தொற்று நேரத்தில் அனுப்பியது. அதில் எந்த உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற விவரம் எதுவுமே இல்லையே?
சுற்றறிக்கை என்பது கல்லூரியின் அனைத்து நடவடிக்கைகளும் சார்ந்ததுதான்.
இந்த சர்ச்சைக்குரிய உறுதிமொழி மற்ற மருத்துவக் கல்லூரிகளிலும் எடுக்கப்பட்ட நிலையில் மதுரையில் மட்டும் எதற்கு இந்த நடவடிக்கை?
அரசு, தனியார் கல்லூரிகளில் எங்கெங்கு தவறு நடந்துள்ளதோ அங்கு விசாரித்து அக்கல்லூரிகள் மீதும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
துணை முதல்வர் தனலெட்சுமி ஒத்திகை நிகழ்ச்சியில் இருந்துள்ளார். அப்படியென்றால் அவரது கவனத்துக்கு வராமலா இந்த உறுதிமொழி வாசிப்பு நடந்திருக்கும்?
விசாரணையில் கேட்டதற்கு நான் பார்க்கவில்லை என்று அவர் கூறினார். இது முதற்கட்ட விசாரணைதான். தேவைப்பட்டால் மற்றொரு விசாரணை மேற்கொள்வோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT