Published : 04 May 2022 05:00 AM
Last Updated : 04 May 2022 05:00 AM

இலங்கை மக்களுக்கு நன்கொடை தாருங்கள்: மனிதாபிமான அடிப்படையில் உதவுமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: கடும் பொருளாதார நெருக்கடியால் வாடும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்ய நன்கொடை வழங்குமாறு பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எரிபொருளுக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதும், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால் சமையல்கூட செய்ய முடியாமல் தவிக்கும் சூழலும் தற்போது அங்கு தொடர் கதையாகியுள்ளன. இதனால், இலங்கை தமிழர் குடும்பங்கள் பல அகதிகளாக படகுகளில் ஏறி தமிழகம் நோக்கி வரத்தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து, கடந்த மார்ச் 31-ம் தேதி டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழகத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதியளிக்கும்படி வலியுறுத்தினார்.

இதையடுத்து, ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்காக ரூ.80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பில் 137 உயிர் காக்கும் மருந்துகள், ரூ.15 கோடி மதிப்பில் 500 டன் பால் பவுடர்கள் அடங்கிய தொகுப்பை முதல்கட்டமாக வழங்க தமிழக அரசு முடிவெடுத்தது. இந்த பொருட்களை வழங்க அனுமதிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஏப்.29-ம் தேதி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ரூ.50 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியதை சுட்டிக்காட்டி, பொதுமக்களும் நன்கொடை வழங்கலாம் என தெரிவித்திருந்தார். அத்துடன் மார்க்சிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒருமாத சம்பளத்தை தரத் தயாராக இருப்பதாகவும் அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்றும் பேரவையில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு வழங்கும் பொருட்களை மத்திய அரசு மற்றும் இந்தியத் தூதரகம் வாயிலாக இலங்கை அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசு அனுமதியளித்தது. இதனை, கடந்த மே 1-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும் நன்றி தெரிவித்தார்.

இந்தச் சூழலில், இலங்கை மக்களுக்கு நம்மால் ஆன உதவிகளை செய்வோம் என்று அழைப்பு விடுத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தம்மால் இயன்ற நன்கொடைகளை வழங்குமாறு பொதுமக்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையால் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு தமிழகத்தில் இருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பப்படும் என்று அறிவித்திருந்தேன். அதற்கான மத்திய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது.

இதன் முதல்கட்டமாக தமிழகத்தில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பப்பட உள்ளன. இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவும் வகையில், நல்லெண்ணம் கொண்ட அனைவரும் தம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே, மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நன்கொடை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வழங்கும் உதவிகள் இலங்கை மக்களுக்கு தேவையான பொருட்களாக வாங்கி அனுப்பப்படும்.

நன்கொடை வழங்கும் முறை

நன்கொடையை மின்னணு பரிவர்த்தனை மூலம் வழங்க விரும்புவோர் https://ereceipt.tn.gov.in.cmprf/cmprf.html என்ற இணையதள லிங்க் மூலமாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமைச் செயலக கிளை சேமிப்பு கணக்குக்கு அனுப்பலாம். சேமிப்பு கணக்கு எண்: 117201000000070, ஐஎஃப்எஸ்சி குறியீடு: IOBA0001172, முதல்வர் பொது நிவாரண நிதி பான் எண் AAAGC0038F ஆகும்.

வெளிநாட்டு பங்களிப்புகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மத்திய அலுவலகத்தின் ‘IOBAINBB001’ என்ற ஸ்விப்ட் குறியீட்டை பயன்படுத்தி அனுப்பலாம். இசிஎஸ் முறை மூலம் ஆன்லைனில் தொகையை அனுப்புவோர், வருமானவரி விலக்கு பெறவும், அதிகாரப்பூர்வ ரசீது பெறவும் தங்களது பெயர், தொகை, வங்கி, கிளை, பணம் அனுப்பும் தேதி, பரிவர்த்தனை குறிப்பு எண், தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி அல்லது செல்போன் எண் ஆகிய விவரங்களை வழங்க வேண்டும்.

நன்கொடையை யுபிஐ-விபிஏ ஐடி:tncmprf@iob மற்றும் போன்பே, கூகுள்பே, பேடிஎம், அமேசான்பே, மோபிக்விக் உள்ளிட்ட கைபேசி செயலிகள் மூலமாகவும் அனுப்பலாம். காசோலை, வரைவோலை மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர், ‘அரசு இணைச் செயலர் மற்றும் பொருளாளர், முதல்வர் பொது நிவாரண நிதி, நிதித்துறை, தலைமைச் செயலகம், சென்னை 600009. தமிழ்நாடு, இந்தியா’ என்ற முகவரிக்கும் அனுப்பலாம். மேலும் அனுப்பிவைக்கப்பட வேண்டியவற்றை அந்தந்தமாவட்ட ஆட்சியர்களிடமும் வழங்கலாம். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80-ஜி பிரிவின்கீழ் வருமானவரி விலக்கு பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திமுக ரூ.1 கோடி நிதி

இதனிடையே, இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் திமுக தலைவர் மு.க..ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இலங்கை மக்களுக்கு உதவ, முதல்கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், உயிர்காக்கும் மருந்துகளை தமிழக அரசு சார்பில் மத்திய அரசு அனுமதியுடன் விரைவில் அனுப்ப உள்ளோம்.

நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திமுக சார்பில் ரூ.1 கோடியும், திமுக எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியமும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்பதை திமுக தலைவர் என்ற முறையில் அறிவிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x