Published : 04 May 2022 06:11 AM
Last Updated : 04 May 2022 06:11 AM

இடஒதுக்கீட்டை நிர்ணயம் செய்வதற்கு முன்பு தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்: தேவநாதன் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் சாதி, மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை நிர்ணயிப்பதற்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தி.தேவநாதன் யாதவ் தெரிவித்தார்.

சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பில், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தி.தேவநாதன் யாதவ் தலைமையில், பாஜக பொதுச் செயலாளர் சீனிவாசன், கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உட்பட பல்வேறு சமுதாயதலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு பிறகே இடஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட வேண்டும்என்று அனைத்து தரப்பினரும்வலியுறுத்தினர். மேலும், 8 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த தி.தேவநாதன் யாதவ் தலைமையில் கூட்டு நடவடிக்கை குழுவும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’யிடம் தி.தேவநாதன் யாதவ் கூறியதாவது:

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திசாதி பலத்துக்கேற்ப இடஒதுக்கீடு அளிப்பதே சரியாக இருக்கும் என்பது எங்கள் கூட்டமைப்பின் கருத்து. தற்போது 69 சதவீத இடஒதுக்கீட்டில் 26.5 சதவீதம்தான் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ளது.31 சதவீதம் பொதுப் பிரிவினருக்கு வழங்கப்படுகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி,பலம் அடிப்படையில் இடஒதுக்கீடுவழங்குவதுதான் அதிக அளவில்உள்ள இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இடஒதுக்கீடு கிடைக்கஒரே தீர்வு. இது கடந்த 40 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வரும் முயற்சி. ஆனால், எந்த அரசும் இதுகுறித்து செவி சாய்க்கவில்லை. தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பிரதமர், முதல்வரை சந்தித்து வலியுறுத்த உள்ளோம். அதற்கு நேரம் கேட்டுள்ளோம்.

வன்னியருக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வன்னியர்கள் அதிகமாக இருந்தால் கூடுதலாகவேகூட வழங்கலாம். அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.வன்னியர் உட்பட எந்த சமூகத்துக்கும் இடஒதுக்கீடு வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை.

சிறுபான்மையினர், மொழிவாரி சிறுபான்மையினர் நடத்தும் கல்விநிறுவனங்களில், ஓபிசி பிரிவினருக்கு இடம் கிடைப்பதில்லை. அரசின் பிரதிநிதி அந்த நிறுவனத்தில் இடம்பெற்றால், இதுபோன்று நடக்காது.

அதேபோல, மொழிவாரி சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்களை பெரு நிறுவன முதலாளிகள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசின் கணக்கெடுப்பை எதிர்பார்க்காமல், மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். அப்போதுதான் உச்ச நீதிமன்றத்தில் சரியான தரவுகளை அளிக்க முடியும்.

இதுதவிர, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கிரீமிலேயர் முறையை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசு ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x