

பொன்னேரி: தனியார் நிலக்கரி முனையம் வாடகையை உயர்த்தக் கோரி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளியில் தனியார் நிலக்கரி முனையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் அனல் மின் நிலையங்கள், இரும்பு உருக்கு ஆலைகள் உள்ளிட்டவற்றுக்கு தேவையான நிலக்கரி நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரி மற்றும் டிரைலர் லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. நிலக்கரி எடுத்துச் செல்லும் ஒப்பந்த லாரிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டுக்குப் பிறகு வாடகை உயர்த்தப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் வாகன உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு, சுங்கக் கட்டணம் உயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு தனியார் நிலக்கரி முனையம் லாரி வாடகையை 30 சதவீதம் உயர்த்தித் தரவேண்டும். அதற்கான முடிவை மே 1-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் இல்லாவிட்டால் மே 2-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என, கடந்த மாதம் சென்னை மாதவரம் பகுதியில் நடந்த சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி சுற்றுவட்டார டிப்பர் லாரி மற்றும் டிரைலர் லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், நிலக்கரி முனைய நிர்வாகம் தரப்பில், வாடகை தொடர்பாக எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. இதையடுத்து,டிப்பர் லாரி, டிரைலர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம்காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கினர். 2-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.
இதனால், நிலக்கரிகையாளும் தனியார் அனல் மின்நிலையங்கள், தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.