

தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் கி.முத்துராமன் (52). மாநகராட்சி கட்டணக் கழிப்பறையில் கட்டணம் வசூல் செய்யும் வேலை செய்கிறார். இவரது மனைவி காளியம்மாள்(47). இவர்களின் மகள் காத்தம்மாள் என்ற கார்த்திகா(21). இவரை கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விளாத்திகுளம் அருகேயுள்ள மார்த்தாண்டம்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.
9 மாத கர்ப்பிணியான கார்த்திகாவுக்கு வளைகாப்பு நடத்தி தூத்துக்குடியில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்தனர். நேற்றுமுன்தினம் இரவு காளியம்மாள், கார்த்திகா மற்றும் முத்துராமன் ஆகியோர் வீட்டின் உள்அறையில் தூங்கியுள்ளனர். முத்துராமனின் தாயார் காத்தம்மாள்(72) வெளியறையில் தூங்கிஉள்ளார். நேற்று அதிகாலை 3 மணியளவில் உள்ளறையின் கூரை திடீரென இடிந்து விழுந்தது. அந்த அறையில் தூங்கிய மூவரும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கினர்.
தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காளியம்மாள் மற்றும் கார்த்திகா ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். காயங்களுடன் மீட்கப்பட்ட முத்துராமன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முத்துராமன் குடும்பத்தினர் வசித்து வந்த வீடு சுமார் 60 ஆண்டுகள் பழமையானது என தெரிகிறது. கூரை ஏற்கெனவே சேதமடைந்த நிலையில் இருந்து உள்ளது.
அமைச்சர் பெ.கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆட்சியர் கி.செந்தில் ராஜ், எஸ்.பி. எல்.பாலாஜி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். முத்துராமனை சந்தித்து ஆறுதல்கூறினர். திமுக சார்பில் ரூ.2 லட்சம்உதவித் தொகையை முத்துராமனிடம் அமைச்சர் வழங்கினார்.