Published : 04 May 2022 06:08 AM
Last Updated : 04 May 2022 06:08 AM

தமிழகத்தில் முதல்முறையாக கோபியில் பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடக்கம்

ஈரோடு: தமிழகத்தில் முதல்முறையாக, மகளிருக்கென பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் கோபியில் தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த நிகழ்வில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம், மகளிருக்கான பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது;

இந்த சங்கம் கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்கத்தில் தற்போது 260 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

அரசுத்துறை, கூட்டுறவு நிறுவனங்கள், பொதுத்துறை, உள்ளாட்சித்துறை, தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் அலுவலக பணிக்குத் தேவையான, தகுதியுள்ள சங்க உறுப்பினர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவது இந்த சங்கத்தின் நோக்கமாகும். மேலும் பெண்கள் பணிசெய்யும் இடத்தில், உறுப்பினர்களின் நலன்கருதி பணி வழங்கும் அலுவலகத்துடன் அல்லது நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி, பணிப்பாதுகாப்பு வழங்கப்படும்.

சங்கத்தில் உறுப்பினராக உள்ள பெண்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள், மானியங்களை சங்கம் பெற்றுத் தரும். சங்க உறுப்பினர்கள் சுயமாகவும், கூட்டாகவும், சிறுதொழில், கைவினைத்தொழில்கள் செய்து அவர்களின் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றார்.

இந்நிகழ்வில், ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளர் கே.ரேணுகா, ஈரோடு சரக துணைப்பதிவாளர் கு.நர்மதா, பெண் ஒப்பந்தப்பணியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கே.பத்மாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x