தருமபுரி, கிருஷ்ணகிரியில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு வாழை, தென்னை மரங்கள் சேதம்

தருமபுரி, கிருஷ்ணகிரியில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு வாழை, தென்னை மரங்கள் சேதம்
Updated on
1 min read

தருமபுரி / கிருஷ்ணகிரி: தருமபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி பகுதியில் நேற்று முன் தினம் இரவு 18 மி.மீட்டர் மழை பதிவானது.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் மாலை முதலே வானில் மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. இருட்டும் நேரத்தில் பலத்த காற்றும் வீசியது. அதைத் தொடர்ந்து மாவட்டத்தில் சில பகுதிகளில் மழையும் பெய்தது. மாரண்ட அள்ளி பகுதியில் மாவட்டத்தில் அதிகபட்ச அளவாக 18 மி.மீட்டர் மழை பதிவானது. இதுதவிர, பென்னாகரம் பகுதியில் 4 மி.மீட்டர், ஒகேனக்கல் பகுதியில் 1 மி.மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் மிதமான தூறலுடன் கூடிய மழை மட்டுமே பெய்தது.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. பென்னாகரம் வட்டம் கோடிஅள்ளி ஊராட்சி தெய்வபுரம் ஒண்டிக்கோட்டையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஜெயவேல் (35). இவர் நேற்று மாலை பென்னாகரம் அடுத்த ஜக்கம்பட்டி பகுதியில் உள்ள மளிகைக் கடையின் மாடியில் இருந்தார். பலத்த காற்று வீசியதில், கட்டிடத்தின் மாடியில் இருந்து தார்சாலையில் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மரங்கள் சாய்ந்தன

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு போச்சம்பள்ளி அடுத்த குடிமேனஅள்ளி, அகரம் பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு 6 பனை மரங்கள்வேரோடு சாய்ந்தன. குடிமேனஅள்ளி செல்லும் சாலையில் இருந்த புளியமரம் காற்றுக்கு கீழே விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போச்சம்பள்ளி வட்டாட்சியர் இளங்கோ மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஜேசிபி உதவியுடன் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரத்தின் மீது மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதேபோல், சுண்டக்கப்பட்டி பகுதியில் ஒரு ஏக்கரில் விளைந்து இருந்த வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. வேப்பனப்பள்ளி அடுத்த வினாயகபுரம் ரேஷன் கடையில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் கடையின் மேற்கூரை பறந்தது. ரேஷன் கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் மழையில் நனைந்தன.

ஓசூரில் இடி, மின்னலுடன் மழை

ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பிற்பகல் மற்றும் இரவு வேளையில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. நேற்று பிற்பகல் 2 மணிக்குப் பிறகு குளிர்ந்த காற்று வீசியது.

தொடர்ந்து இடி, மின்னலுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. 3 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் ஓசூர் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. ஓசூர் வட்டத்தில் தினமும் மாலை வேளையில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in