

சென்னை: ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகளை செய்து தருவதற்கான நடவடிக்கைகளை தெற்கு ரயில்வே மேற்கொண்டுள்ளது.
இதன்படி, ரயில் நிலையங்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நிர்பயா திட்டத்தின் கீழ், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதன்படி நுங்கம்பாக்கம், குரோம்பேட்டை, பழவந்தாங்கல், செயின்ட்தாமஸ் மவுன்ட், அரக்கோணம், செங்கல்பட்டு, திருமயிலை உள்ளிட்ட 70 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், பெரம்பூர், திருநின்றவூர் ஆகிய ரயில் நிலையங்களில் ரயிலில் இருந்து இருபுறமும் இறங்கும் வகையில் நடைமேடைகள் அமைக்கப்பட உள்ளன.
மேலும், பெரம்பூர், நுங்கம்பாக்கம், பேசின்பிரிட்ஜ் சந்திப்பு, மாம்பலம், குரோம்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் லிப்ட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல, திருநின்றவூர் ரயில் நிலையத்தில் இரண்டு லிப்ட்டுகள் பொருத்தப்பட உள்ளன.
இதைத் தவிர, ரயில் நிலையங்களில் பைக், சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக ரயில்வே நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு உரிமம் வழங்கியுள்ளது. தாம்பரம், கிண்டி, பெருங்குடி, சைதாப்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் வாகன நிறுத்துவதற்கு தனியாருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, ஆவடி ரயில் நிலையத்திலும் வாகன நிறுத்தத்துக்கான இடம் சீரமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அங்கு வாகனங்கள் நிறுத்துவதற்கான ஒப்பந்தம் வழங்கப்படும்.
இதேபோல, ரயில் நிலையங்களுக்குச் செல்லும் வழியில் நடைபாதையில் கடைகளை வைத்து செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.