பொது இடங்களில் கால்நடைகளை திரியவிடுவோர் மீது நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

பொது இடங்களில் கால்நடைகளை திரியவிடுவோர் மீது நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: பொது இடங்களில் கால்நடைகளை சுற்றித் திரிய விடுவோர் மீது பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களிலும், மண்டல நல அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையில், காவல் துறையுடன் இணைந்து, மக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மொத்தம் 557 மாடுகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550 வீதம் மொத்தம் ரூ.8.63 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மாடுகளின் உரிமையாளர்கள், அவர்களின் சொந்த இடங்களிலேயே மாடுகளைக் கட்டிவைக்க வேண்டும். பொது இடங்களில் திரியவிடக் கூடாது. இதை மீறி மாடுகளை பொது இடங்களில் திரியவிடுவோர் மீது, பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படுவதுடன், காவல் துறையில் புகார் செய்யப்பட்டு, மாடுகளின் உரிமையாளர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றம் செய்யும்போது, அந்த இடங்கள் குறித்து முன்கூட்டியே அந்தந்த மண்டல நல அலவலர்களின் அனுமதியைப் பெற வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

303 கழிவுநீர் இணைப்பு துண்டிப்பு

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் கூறும்போது, ``சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்களில், சட்டவிரோதமாக 498 கழிவுநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தது கடந்த மாதம் கண்டறியப்பட்டது.

அவற்றில் 303 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. சட்டவிரோதமாக இணைப்பு கொடுத்தவர்களிடம் ரூ.1.83 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சிப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in