ஏசிஜே இதழியல் கல்லூரி பட்டமளிப்பு விழா: 4 பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது

ஆசிய இதழியல் கல்லூரி (ஏசிஜே) பட்டமளிப்பு விழாவில், பத்திரிகையாளர்கள் ஷ்யாம்லால் யாதவ், சந்தீப் சிங் ஆகியோருக்கு ஏசிஜே புலனாய்வு இதழியல் விருதையும், பிரேமா தேவி, ஹிமான்சு கலா ஆகியோருக்கு கே.பி.நாராயண குமார் நினைவு சமூக மாற்ற இதழியல் விருதையும் மூத்த பத்திரிகையாளர் ஆயாஸ் மெமன் வழங்கினார், அருகில், ஊடக மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் சசிகுமார், அறங்காவலர் என்.ராம் மற்றும் ஹர்ஷா சுப்ரமணியம், ஸ்வப்னா சுந்தர் ஆகியோர் உள்ளனர். படம்: ம.பிரபு
ஆசிய இதழியல் கல்லூரி (ஏசிஜே) பட்டமளிப்பு விழாவில், பத்திரிகையாளர்கள் ஷ்யாம்லால் யாதவ், சந்தீப் சிங் ஆகியோருக்கு ஏசிஜே புலனாய்வு இதழியல் விருதையும், பிரேமா தேவி, ஹிமான்சு கலா ஆகியோருக்கு கே.பி.நாராயண குமார் நினைவு சமூக மாற்ற இதழியல் விருதையும் மூத்த பத்திரிகையாளர் ஆயாஸ் மெமன் வழங்கினார், அருகில், ஊடக மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் சசிகுமார், அறங்காவலர் என்.ராம் மற்றும் ஹர்ஷா சுப்ரமணியம், ஸ்வப்னா சுந்தர் ஆகியோர் உள்ளனர். படம்: ம.பிரபு
Updated on
1 min read

சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற ஏசிஜே இதழியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 4 பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

‘தி இந்து’ குழுமத்தின் ஊடக மேம்பாட்டு அறக்கட்டளையின் கீழ் சென்னை தரமணியில் இயங்கிவரும் ஆசிய இதழியல் கல்லூரியின் (ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம்-ஏசிஜே) பட்டமளிப்பு விழா மற்றும் ஏசிஜே விருது வழங்கும் விழா சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில், சிறந்த புலனாய்வு பணிக்காக பத்திரிகையாளர்கள் ஷ்யாம்லால் யாதவ், சந்தீப் சிங் ஆகியோருக்கு ஏசிஜே புலனாய்வு இதழியல் விருதும், மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணியாளர்களின் அவல நிலையை வெளிக்கொண்டு வந்ததற்காக பத்திரிகையாளர்கள் பிரேமா தேவி, ஹிமான்சு கலா ஆகியோருக்கு கே.பி.நாராயண குமார் நினைவு சமூக மாற்ற இதழியல் விருதும் வழங்கப்பட்டன. இவ்விருதுகளை மூத்த பத்திரிகையாளரும் கட்டுரையாளரும் எழுத்தாளருமான ஆயாஸ் மெமன் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து ஆயாஸ் மெமன், “தொழில்நுட்ப யுகத்தில் ஊடகங்களுக்கான பலன்களும், சவால்களும்” என்ற தலைப்பில் லாரன்ஸ் தனா பிங்காம் நினைவு சொற்பொழிவாற்றினார். அப்போது அவர் கூறும்போது, “தொழில்நுட்ப வளர்ச்சியானது இதழியல் துறையில் பல்வேறு பணிகளை எளிதாக்கியிருக்கிறது. செய்திகளையும், படங்களையும் உடனுக்குடன் அனுப்பவும் தேவையான திருத்தங்களைச் செய்யவும் தொழில்நுட்ப வசதிகள் உதவுகின்றன. அதேநேரத்தில் சமூக ஊடகங்களின் வருகையால் இதழியல் துறை பல்வேறு சவால்களையும் சந்திக்க வேண்டிள்ளது” என்றார்.

ஊடக மேம்பாட்டு அறக்கட்டளையின் அறங்காவலர் என்.ராம் பேசும்போது, “ஏசிஜே கல்லூரி இந்தியாவிலோ தெற்காசியாவிலோ மட்டுமல்ல உலக அளவில் சிறந்த இதழியல் கல்லூரியாக திகழ்கிறது. இதழியல் துறையில் மிகுந்த அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களே இதற்கு முக்கிய காரணம். ஊடகம் தொடர்பான அனைத்து நவீன சாதனங்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஊடகத் துறையில் பணியாற்றுவோர் தொடர்ந்து அறிவை மேம்படுத்தி வருவதுடன் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தேவையான திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்” என்று குறிப்பிட்டார்.

அறக்கட்டளை மற்றும் ஏசிஜெ கல்லூரியின் தலைவர் சசிகுமார் அறிமுக உரையாற்றினார்.

விழாவில், அச்சு, தொலைக்காட்சி, வானொலி, ஆன்லைன் தொடர்பான இதழியல் டிப்ளமா படிப்புகளில் மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். முன்னதாக, ஏசிஜே கல்லூரியின் டீன் நளினி ராஜன் வரவேற்றுப் பேசும்போது, இந்த ஆண்டு படிப்பை முடித்த அனைத்து மாணவர்களுக்கும் ஊடக நிறுவனங்களில் பணிவாய்ப்பு கிடைத்திருப்பதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார். நிறைவாக, பேராசிரியை ஷாலினி ஷா நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in