

1952ல் சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் நடைபெறுகிறது. அந்த ஆண்டுதான் கடலூர் நகரம் சட்டப்பேரவை அந்தஸ்தை பெறுகிறது.
கடலூர் நகராட்சி மற்றும் கடலூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 31 ஊராட்சிகளை உள்ளடக்கியது இந்த கடலூர் தொகுதி. 2 லட்சத்து 28 ஆயிரத்து 541 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 494 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 25 பெண் வாக்காளர்களும், 22 திருநங்கைகளும் உள்ளனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது தொகுதி மறுசீரமைப்பில் குப்பம், எஸ்.புதூர், வடுகபாளையம், அரிசிபெரியாங்குப்பம், மணக்குப்பம், சொத்திக்குப்பம், சான்றோர்பாளையம், காந்திநகர், குடிகாடு, சேடப்பாளையம், செம்பங்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு சென்றுவிட்டது. கடலூர் நகர்ப் பகுதியில் பலதரப்பட்ட வர்த்தமும், கிராமபுறங்களில் விவசாயமும் பிரதான தொழிலாக உள்ளது.
பாதாள சாக்கடை திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழி சாலைத் திட்டம் கொண்டு வரப்படவில்லை, பேருந்து நிலையம் மற்றும் துறைமுகத்தை விரிவுபடுத்தவில்லை, சிப்காட் தொழிற்சாலையால் ஏற்படும் மாசுபடுதலை கட்டுப்படுத்திட அரசு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நகரில் ஒருங்கிணைந்த வடிகால் வசதி செய்து தரப்படவில்லை. கம்மியம்பேட்டை தடுப்பணை பகுதியில் சர்க்கரை ஆலையின் கழிவுநீர் கலப்பதால் நிலத்தடிநீர் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த தொகுதியில் குறிப்பிடும் படியாக எந்த ஒரு சிறப்பு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்ற குறைகளை அனைத்துத் தரப்பு மக்களும் ஆதங்கத்தோடு தெரிவிக்கிறார்கள்.
2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சம்பத் வெற்று பெற்று எம்எல்ஏவாகி அமைச்சரானார். தொகுதியில் பல்வேறு சிக்கல்கள் நிலவும் நிலையில் இந்த முறையும் கடலூரில் களம் காண்கிறார். நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். தென் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற தன் மீதான பிம்பத்தை உடைக்க, தன் பகுதி மக்கள் சாராத ஒரு இடத்தில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று முற்றிலும் தனக்கு தொடர்பில்லாத கடலூரை தேர்வு செய்திருக்கிறார் சீமான். இவரால் இந்தத் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றிருக்கிறது.
கடலூர் அடிப்படையில் திமுகவின் கோட்டை இந்த தேர்தலில் அந்த பெயரை எப்படியும் தக்க வைக்க வேண்டும் என்ற இக்கட்டில் இருக்கின்றனர் திமுகவினர். வடமாவட்டங்களின் மிக முக்கிய நகரம் கடலூர் என்பதால் பாமகவினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த பரபரப்பால் கடலூர் தேர்தல் களம் பற்றி எரிகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
திமுகவினர் தங்களது தேர்தல் அறிக்கையில் பிரதான ஆயுதமாக எடுத்து கடுமையாக களப்பணியாற்றி வருகின்றனர். அதிமுகவினர் அரசின் நலதிட்டங்களை கூறி பகுதி, பகுதியாக பிரிந்து சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். மக்கள் நலக்கூட்டணியினர் தங்கள் கூட்டணித் தலைவர்கள் சொன்னதைக் கூறி வாக்கு கேட்டு வருகின்றனர். பாமகவினர் வீட்டுக்கு வீடு வாக்காளர் சந்திப்பு என்ற பாணியில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் கிராமப்புறங்களை குறிவைத்து தேர்தல் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளனர். பாஜகவினரும் மத்திய அரசின் திட்டங்களை கூறி களத்தில் வலம் வருகின்றனர்.
நிறைய பிரச்னைகளும், மக்களிடையே எக்கசக்க எதிர்பார்ப்புகளும் உள்ள இந்த தொகுதிக்கு வேட்பாளர்கள் என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்? உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் அவர்களே சொல்கிறார்கள்.
அமைச்சர் சம்பத், அதிமுக வேட்பாளர்
தன்னிறைவு பெற்ற தொகுதியாக இதை மாற்றுவேன். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவேன். பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். நகராட்சியில் சேரும் குப்பைகளை மறுசுழற்சி செய்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை கொண்டு வருவேன். நிரந்தர வெள்ளத்தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவேன். மின்புதை கேபிள் திட்டத்தை விரைவாக செயல்படுத்துவேன்.
இள புகழேந்தி, திமுக வேட்பாளர்
கடலூர் துறைமுகத்தை மேம்படுத்தி, விரிவுபடுத்தி ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான வழிவகை செய்வேன். தூண்டில் வளைவுத் திட்டத்தை செயல்படுத்துவேன். மாசு கட்டுப்பாட்டு விழிப்புணர்வுத் திட்டங்களை செயல்படுத்துவேன். புற்றுநோயைத் தடுக்கும் வகையில் அரசு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு தனி பிரிவை ஏற்படுத்துவேன். மாணவர்களுக்கான தனித்திறன் பயிற்சி மையம் தொடங்க நடவடிக்கை எடுப்பேன். பெரிய அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கிட ஐடி பார்க் சென்டரை கொண்டு வருவேன். மருத்துவக் கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். கிராமப்புறங்களில் வேளாண் வளர்ச்சி திட்டங்களை செய்திடுவேன்.
வழக்கறிஞர் சந்திரசேகர், மக்கள் நலக்கூட்டணி தமாக வேட்பாளர்
தொகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பேன். கடலூர் துறைமுகத்தை மேம்படுத்தி, விரிவுபடுத்தி கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுப்பேன். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன். தரமான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்து தருவேன். நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் கெடிலம், பெண்ணை ஆறுகளில் தடுப்பணைகள் கட்டியும், கொண்டாங்கி ஏரியை தூர் வாரியும் நீரை தேக்கி நிலத்தடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன். மனித குலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருவேல மரங்கள் தொகுதியில் அதிகம். இதை அழிக்க நடவடிக்கை எடுப்பேன். மாசு கட்டுப்பாடு நடவடிக்கையை மேற்கொள்வேன். அரசு மருத்துவமனையில் கேன்சருக்கு தனிப் பிரிவை உருவாக்குவேன். தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து பிரச்சினைகளையும் உடனுக்கு உடன் செய்து முடிப்பேன்.
பழதாமரைக்கண்ணன், பாமக வேட்பாளர்
கடலூர் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபட்டு கிடக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன். அரசு மருத்துமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பேன். நகரில் வடிகால் வசதியை ஏற்படுத்தி தருவேன். தரமான சாலை வசதியை செய்து தருவேன். கெடிலம், பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டி நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்வேன். சில்வர் பீச் மேம்படுத்தப்பட்டு படகு குழாம் அமைக்கப்படும். பெண்களுக்கு என்று தனி பேருந்து இயக்க நடவடிக்கை எடுப்பேன். துறைமுகம் நவீனப்படுத்தப்படும். கடல் அரிப்பை தடுக்கும் வகையில் அக்கரைகோரி பகுதியில் கருங்கல் கொட்டப்படும். விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வாங்கப்படும்.
சீமான், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதான் என் பிரதான பணியாக இருக்கும். தொகுதிகுட்பட்ட கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் வகையிலும் கிராமபுற மாணவர்கள் நலன் கருதியும் அதிகளவு சிற்றுந்துகளை (மினி பஸ்) இயக்க நடவடிக்கை எடுப்பேன். வீட்டுமனை பட்டா பெற்றுத் தருவேன். உலகத் தரம் வாய்ந்த புற்றுநோய் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். கடலூர் அடிப்படையில் மீனவர்கள் அதிகமுள்ள தொகுதி. அவர்களுடைய நலன் காத்திட பல்வேறு செயல் திட்டங்களை செய்வேன். வலைபின்னும் இடத்திற்கு மேற் கூறை அமைப்பேன். மற்ற தொகுதிகளைப் போலவே கடலூரிலும் குடிநீர் சிக்கல் இருக்கிறது. அதை தீர்த்து வைப்பேன். நீர்நிலைகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துவேன். கடலூர் துறைமுகத்தை மேம்படுத்தி ஏற்றுமதி முனையத்தை ஏற்படுத்துவேன்.
திமுகவின் முக்கியத் தொகுதி, அதிமுகவின் கைவசம் உள்ள தொகுதி, நட்சத்திர வேட்பாளர் சீமான் களமிறங்கியிருக்கும் தொகுதி... இந்த காரணங்களால் கடலூர் தொகுதி தமிழகத்தின் டாப் 10 தொகுதிகளுள் ஒன்றாக மாறியிருக்கிறது.
யார்தான் வெல்வார்? கடலூரில் இருக்கும் 2 லட்சத்து 28 ஆயிரத்து 541 வாக்காளர்களோடு நாமும் காத்திருப்போம் 19ம் தேதி வரைக்கும்.
மக்கள் கருத்து
ரஞ்சித்குமார் - சொரகால்பட்டு- கடலூர்
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். ஆற்றில் கலக்கும் கழிவுநீரை ஆற்றில் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப் புறங்களுக்கு இரவு நேர பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கல்வியில் கடலூர் பின் தங்கியுள்ளது. கல்வித் தரத்தை உயர்த்திட இப்பகுதிக்கென்று பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும். நகரின் மையப்பகுதி, பள்ளிகள் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். போக்குவரத்து நெரிசலை தடுத்திட சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும். கடலூரில் அரசு மருத்துவக் கல்லூரி, சட்ட கல்லூரி, வேளாண், பொறியியல் கல்லூரிகள் கொண்டு வரவேண்டும். வேலை வாய்ப்பிளை உறுதி செய்திட புதிய நிறுவனங்களை உருவாக்கிட வேண்டும்.
தனலட்சுமி- சுத்துக்குளம் - கடலூர்
புற வழிச்சாலை அமைத்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும். கடலூரில் அதிகளவு சாலை விபத்து நடக்கிறது. அதை தடுக்கும் திட்டமிட்ட சாலை போக்குவரத்து கொண்டு வரவேண்டும். கொண்டாங்கி ஏரி, பெரிய வாய்க்கால் ஆகியவற்றை தூர் வாரி ஆழப்படுத்திட வேண்டும். மக்கள் நலத் திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டும்.
ராம்குமார் - பாதிக்குப்பம் - கடலூர்
கடலூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். சாலை போக்குவரத்தை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திடும் வகையில் தொகுதிக்குள் திட்டங்களை செயல்படுத்திட வேண்டும். அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான கல்வி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூரில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் சீர்கேட்டை சரிசெய்ய வேண்டும்.