Published : 04 May 2022 06:53 AM
Last Updated : 04 May 2022 06:53 AM
நாகர்கோவில்: ‘இந்து தமிழ் திசை’ செய்திஎதிரொலியாக குமரி மாவட்டத்தில்ஆவின் பால் தட்டுப்பாடு நீங்கியது. தினமும் 20,000 லிட்டருக்கு மேல் பால் விநியோகிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தால் உள்ளூரில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் சேகரிக்கப்படும் 8 ஆயிரம் லிட்டருக்கு மேலான பால்நாகர்கோவில் ஆவின் தயாரிப்பு நிலையத்தில் பதப்படுத்தி, தரம் பிரித்து பாக்கெட்டுகள் போடப்படுகிறது. இது தவிர தேவைப்படும் பாலை திருநெல்வேலி, தேனி மாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து நாகர்கோவில் ஆவின் மூலம்20 ஆயிரம் லிட்டருக்கு மேல் நேரடியாகவும், முகவர்கள் மூலமும் குமரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் நாகர்கோவில் பால்பண்ணையில் உள்ள ஆவின் நிலையத்தில் கடந்த 26-ம் தேதி பாலை பதப்படுத்தி குளிரூட்டும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் 27-ம் தேதியில் இருந்து குமரி மாவட்டத்தில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது. சமநிலையில் குளிரூட்டப்படாத பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டதால் அவற்றை வாங்கி பயன்படுத்திய வாடிக்கையாளர்கள் கெட்டுப்போயிருப்பதாக கூறி திருப்பி வழங்கினர்.
ஆவின் முகவர்கள் கெட்டுப்போன பால் பாக்கெட்டுகளை பால்பண்ணைக்கு வாகனங்களில் சென்று திரும்ப வழங்கினர். ஆவின் டேங்கரில் பாதுகாக்கப்படும் 5,000 லிட்டர் பாலும் கெட்டுப் போனது. பாலை குளிரூட்டி பதப்படுத்தும் இயந்திரத்தில் முக்கிய பைப் லைனில் பழுது ஏற்பட்டதால் பால் விநியோகம் பாதிக்கப்பட்டதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்தது. இதுகுறித்த செய்தி ‘இந்து தமிழ் திசை’யில் வெளியானது.
பழுதான இயந்திர பாகங்களை சரி செய்யும் பணிகள் நடந்து வந்தன. கடந்த 7 நாட்களாக குமரிஆவினில் பால் பதப்படுத்த முடியாததால் திருநெல்வேலியில் இருந்துவரவழைக்கப்பட்ட குறைந்த அளவிலான பால் பாக்கெட்டுகள் மட்டும் விநியோகிக்கப்பட்டு வந்தன.
தினமும் 10,000 லிட்டருக்கு மேல் பால் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடைந்தனர். அத்தியாவசிய தேவையான பாலை தட்டுப்பாடின்றி விநியோகிக்க ஏற்பாடு செய்யாமல் காலம் கடத்துவதால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து ‘இந்து தமிழ் திசை’யில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் எதிரொலியாக பழுதான இயந்திரத்தை உடனடியாக சரிசெய்ய ஆவின் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இயந்திரம் சரிசெய்யப்பட்டு நாகர்கோவில் ஆவின் பால் பண்ணையில் மீண்டும் பாலை பதப்படுத்தி குளிரூட்டும் பணி மும்முரமாக நடந்தது. நேற்று வழக்கம்போல் குமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பால் விநியோகம் செய்யப்பட்டது. தினந்தோறும் 20,000 லிட்டர் பாலுக்கு மேல் விநியோகிக்கப்படுகிறது. ஆவின் பால் தட்டுப்பாடு நீங்கியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT