Published : 04 May 2022 06:04 AM
Last Updated : 04 May 2022 06:04 AM

தானிப்பாடி அடுத்த சி.ஆண்டாப்பட்டு கிராமத்தில் 13-ம் நூற்றாண்டு பாறை கல்வெட்டு கண்டெடுப்பு: வரலாற்று ஆய்வு நடுவம் தகவல்

சி.ஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள பாறையில் கண்டெடுக்கப்பட்ட பாறை கல்வெட்டு.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த சி.ஆண்டாப்பட்டு கிராமத்தில் ‘13-ம் நூற்றாண்டு பாறை கல்வெட்டு’ கண்டெடுக்கப்பட்டதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆய்வு நடுவம் அமைப்பைச் சேர்ந்த தர், பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சி.ஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள உயரமான பாறையில் 10 அடி நீளத்தில் கல்வெட்டு உள்ளது. இதன் எழுத்தமைதியைக் கொண்டு 13-ம் நூற்றாண்டு ஸ்ரீ வல்லப பாண்டியன் காலத்தில் வெட்டப்பட்டது என்றும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நிலம் தானம் பற்றியது என கல்வெட்டை ஆய்வு செய்த கல்வெட்டியல் அறிஞர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

அந்த கல்வெட்டில், திரிபுவன சக்கரவர்த்திகள் கோமாற பன்மரான வல்லப பாண்டியனின் ஆட்சி காலத்தில் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள மெய்குன்ற நாடு மற்றும் நரிப்பள்ளி நாடு பகுதியில் உள்ள திருவண்ணாமலை உடைய நாயனாருக்கு, அதாவது அண்ணாமலையாருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பழந் தேவதானமான ஆண்டார்ப்பட்டு நிலம் நெடு நாட்களாக, புலையர்கள் வழியில் உள்ள நிலத்தை கோயில் பணியாளரான கண்ணாரமுதப்பெருமாளான திருச்சிற்றம்பல நம்பி பொன் மல்லப்பனுக்கு பெருமாளும், மல்லப்பதென்னாயக்கரும், கோயில் தானத்தாரும் மற்றும் அனைத்து வரிகளும் உட்பட காணியாக நிலம் கொடுத்ததை பற்றிய செய்தி வெட்டப்பட்டுள்ளது.

ஆண்டாப்பட்டு என அழைக் கப்படும் கிராமத்தின் பெயர், முற்காலத்தில் ஆண்டார்ப்பட்டு என அழைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு வெட்டப்பட்ட பாறையின் வலதுபுறம் சூரியன் மற்றும் சந்திரன், மேலும் திரு அண்ணாமலையை குறிக்கும் முக்கோண குறியீடு ஆகியவை இடம் பெற்றுள்ளது. திருவண்ணாமலை கோயில் வழிபாடு மற்றும் வளர்ச்சிக்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நிலத்தின் மூலம் தானம் கிடைத்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x