இலங்கை நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி: ஸ்டாலின் அறிவிப்பு

இலங்கை நிவாரண நிதிக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி: ஸ்டாலின் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: "இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்" என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "எல்லைகளைக் கடந்து உலக மாந்தராகச் சிந்திப்பதுதான் தமிழர் பண்பு. பிறர் துன்பம் கண்டு முதலில் துடிக்கும் நெஞ்சம் தமிழர் நெஞ்சம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் உயரிய அறத்தை ஒழுகி நடக்கும் நாகரிகம் நம் நாகரிகம்.

அந்த வகையில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி அல்லலுறும் இலங்கை மக்களுக்கு உதவிட முதற்கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளைத் தமிழக அரசின் சார்பில் ஒன்றிய அரசின் அனுமதியுடன் விரைவில் அனுப்பவுள்ளோம்.

மேலும், நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.

இத்துடன், திராவிட முன்னேற்றக் கழகச் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்பதையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் அறிவிக்க விரும்புகிறேன்'' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in