புதுச்சேரியில் முதல் முறையாக புஷ்கரணி விழா:  64 அடி உயர சிவன் சிலை அமைக்க முடிவு

புதுச்சேரியில் முதல் முறையாக புஷ்கரணி விழா:  64 அடி உயர சிவன் சிலை அமைக்க முடிவு
Updated on
1 min read

புதுச்சேரி: சங்கராபரணியில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் புஷ்கரணி விழா நடப்பதையொட்டி வரும் மே 15-க்கு பின்னர் 64 அடி உயர பிரமாண்ட சிவன் சிலை அமைக்கும் பணியைத் துவங்க வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வில்லியனூர் திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரா கோயிலையொட்டி சங்கராபரணியில் புஷ்கரணி விழா நடத்த முடிவு எடுக்கப்பட்டது. புஷ்கரணி விழா தொடர்பாக அரசு சார்பில் பல்வேறு குழுக்கள் அமைத்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன் வரலாறு இல்லை என்பதால் இதுவே புதுச்சேரியில் முதல் முறையாக நடத்தப்படும் புஷ்கரணி விழாவாகும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கியதன் மூலம் கோயில் திருப்பணிகள், படித்துறை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடையும் போது குறிப்பிட்ட ராசிக்குரிய நதியில் நடைபெறுவது தான் புஷ்கரணி விழா. அந்தவகையில் மீனம் ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு குருபகவான் இடம்பெயர்வதால் வருகிற 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மேஷம் ராசிக்குரிய கங்கை நதிக்கு இணை யான சங்கராபரணி நதியில் புஷ்கரணி விழாநடைபெற இருக்கிறது. ஏப்ரலில் மொத்தமாக 24 நாட்களுக்கு இவ்விழா நடக்கும்.

புஷ்கரணி விழாவையொட்டி கெங்கரவராக நதீஸ்வரர் கோயிலில் சங்கராபரணி ஆற்றில் கரையோரத்தில் 64 அடி உயரத்தில் பிரமாண்டமாக சிவபெருமான் அமர்ந்த நிலையில் இருப்பது போன்ற சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நடந்துள்ளது. புஷ்கரணிக்கு முன்பாக சிலை அமைத்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இப்பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், சங்கராபரணி மகா புஷ்கரணி விழா பற்றி ஆலோசனைக்கூட்டம் இன்று அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடந்தது.

இதுபற்றி அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ''சங்கராபரணி ஆற்று கரையோரத்தில் சிவபெருமான சிலை அமைக்கும் பணி வரும் 15ம் தேதிக்குள் தொடங்கப்படும். புஷ்கரணிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். அதனால் கெங்கவராக நதீஸ்வரர் கோயிலுக்கு செல்லும் சாலைகள் சீரமைக்கப்படும். கூடுதலாக புதிய சாலைகள் அமைக்கப்படும். அத்துடன் படித்துறைகள், கலைநிகழ்வுகள் நடப்பதற்கான நிரந்தர மேடை உள்ளிட்ட பணிகள் விரைவுப்படுத்தப்படவுள்ளன" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in