

இலவசங்களை விநியோகம் செய்வது மட்டும் தமிழக அரசியல் கட்சிகளின் குறிக்கோளாக இருக்கிறது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் குற்றம் சாட்டினார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் எஸ்.நஜிமாபேகம், மத்திய தொகுதி வேட்பாளர் எம்.ஜாபர்சுல்தான் இப்ராஹிம் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி மதுரை காஜிமார் தெருவில் நேற்று அவர் பேசியது: பிற கட்சிகள் கட்டப் பஞ்சாயத்து, கொள்ளை, கமிஷனில் ஈடுபடுபவர்களை மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன. நேர்மையான வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள் என்றார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இலவசங்களை மட்டுமே திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளன. ஏற்கெனவே ரூ. 4 லட்சம் கோடி அரசுக்கு கடன் உள்ள நிலையில் மேலும் கடன் சுமை ஏற்றுவதை மட்டுமே அதிமுக குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. பல இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவது ஒவ்வொரு அரசியல் கட்சியின் கடமை. எனவே, வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ய மாட்டோம் என ஒவ்வொரு கட்சியினரும் அறிவிக்க வேண்டும். அந்தந்த கட்சி வேட்பாளர்களும் அதை அறிவிக்க வேண்டும் என்றார்.