Published : 03 May 2022 05:19 AM
Last Updated : 03 May 2022 05:19 AM

ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்அரசியல் கட்சித் தலைவர்கள், இஸ்லாமியமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்திகள்:

ஆளுநர் ஆர்.என்.ரவி: சமுதாய மற்றும் வளமான இந்தியாவின் சகோதரத்துவத்தை மேம்படுத்தவும், நன்மை மற்றும் நல்வாழ்வுக்கான அன்பைப் பரப்பவும், போதிக்கப்படும் தியாகம், அகிம்சை, பொறுமை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் தார்மீகப் பாதையை கடைபிடிக்கவும் இந்த நன்னாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: இஸ்லாமியர்களுடன் என்றும் தோளோடு தோள் நிற்கும்இயக்கம் திராவிட இயக்கம். எண்ணற்ற நலத்திட்டங்களை, திமுக ஆட்சி அமைந்தபோதெல்லாம் சிறுபான்மையினர் நலனுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி நிறைவேற்றினார். பெரும்பான்மைவாதமும், மதவாதமும் தலைதூக்காத சமய நல்லிணக் கப் பூங்காவாகத் தமிழகத்தைக் காத்துநிற்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஒற்றுமையுணர்வும் சகோதரப் பாசமும் நிலைத்திருப்பதால்தான், தமிழகம் இந்தியாவின் முன்னணி மாநில மாகத் திகழ்கிறது. இஸ்லாமிய மக்களுக்கு என் வாழ்த்துகள்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி: அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள், பிறருக்கு உதவிபுரியுங்கள், சகோதரத்துவத்துடன் வாழ்த்திடுங்கள் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதி ஏற்போம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: அரசமைப்புச் சட்டத்தின்படி சிறுபான்மை மக்களுக்கு மதச் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஆபத்து ஏற்படுமேயானால், ராகுல்காந்தி தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரண்டு சிறுபான்மை மக்களின் உரிமைகளை காப்பார்கள் என்பதை ரம்ஜான் செய்தியாக கூற விரும்புகிறேன்.

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை: ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும், அமைதியோடும், சமாதானத்தோடும், சகோதர வாஞ்சையோடும் மகிழ்ச்சியாக வாழ என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் நிலைக்கவும், சமய நல்லிணக்கம் ஓங்கவும், சமூக ஒற்றுமை மேம்படவும் இந்த நன் னாளில் உறுதி எடுத்துக் கொள்வோம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: உலகம் முழுவதும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருக இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த்: மக்கள் தங்களிடையே உள்ள வேற்றுமையைப் போக்கி ஒற்றுமையை வளர்த்து, மனித நேயம் மலரவும், நாடு வளம் பெறவும் அனைவரும் முன்னேற பாடுபடுவோம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: இஸ்லாம் என்பது சகோதரத்துவத்துக்கும் சமத்துவத்துக்குமான ஒருபண்பாட்டு நெறியாக, வாழ்வியல் கோட்பாடாக விளங்குவதைக் காணமுடிகிறது. இத்தகைய வாழ்வியல் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் வகையில், இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துதல், இல்லாதவர்களுக்கு அளித்து உதவும் மனம், அனைவரையும் சகோதர, சகோதரிகளாகப் பாவிக்கும் குணம் இவை இஸ்லாமியர்களின் தனிச் சிறப்பு. இஸ்லாமிய சகோதர, சகோதரர்களுக்கு இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதமெல்லாம் இல்லாமல், அன்பும் அமைதியும் பெருகி எங்கும் மகிழ்ச்சி நிறைந்திட வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், பாரிவேந்தர் எம்பி, காங்கிரஸ் எம்பி சு.திருநாவுக்கரசர், கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ., பாமக இளைஞரணிதலைவர் அன்புமணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், சமக தலைவர் ஆர்.சரத்குமார், பெருந்தலைவர் மக்கள்கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து உள்ளிட்டோரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x