

சென்னை: நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, அனல்மின் நிலையங்களில் பகல் நேர மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டு, இரவு நேரத்தில் மட்டும் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது என்று மின் வாரிய அதிகாரிகள் கூறினர்.
தமிழகத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 14 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இது குளிர் காலத்தில் 12 ஆயிரம்மெகாவாட் அளவுக்கு குறைந்தும்,கோடைகாலத்தில் 16 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்தும் காணப்படும். கடந்த 29-ம்தேதி தினசரி மின்தேவை மிக அதிகபட்சமாக 17 ஆயிரம் மெகாவாட்டை தாண்டியது.
அனல்மின் உற்பத்தி நிலையங்களை இயக்க தினமும் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால், ஓடிசா மாநில நிலக்கரி சுரங்கங்களில் இருந்து தினமும் 50 ஆயிரம் டன்னுக்கும் குறைவாகவே நிலக்கரி வரத்து உள்ளது.இதனால், அனல்மின் நிலையங்களில் தினமும் 3,500 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.
இதைத் தவிர, மத்திய தொகுப்பில் இருந்து தினசரி 5,500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. மேலும், தனியார் நிறுவனங்களிடம் இருந்து 2,830 மெகாவாட் மின்சாரமும், மத்திய அரசின் பவர் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் இருந்து 550 மெகாவாட் மின்சாரமும் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், மேட்டூர், தூத்துக்குடி உள்ளிட்ட அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: அனல்மின் நிலையங்களில் தினசரி மின்னுற்பத்தி செய்யகுறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு தேவையான நிலக்கரி இருக்கவேண்டும். தற்போது மத்தியதொகுப்பில் இருந்து கிடைக்கும் நிலக்கரி தினசரி மின்னுற்பத்திக்கு தேவையான அளவுமட்டுமே உள்ளது.
பகலில் சூரியசக்தி மூலம்3,200 மெகாவாட் கிடைக்கிறது. காற்றாலை, சூரியசக்தி மூலம் பகல்நேர மின்தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால், பகலில் அனல்மின் நிலையங்களில் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு மாலை, இரவில் மின்னுற்பத்தி செய்யப்பட்டு இரவு நேர மின் தேவைபூர்த்தியாகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.