உறுதிமொழி ஏற்பு விவகாரம்: மருத்துவ கல்லூரி விழாவில் நடந்தது என்ன? - மதுரையில் மாணவர்கள் பேரவை நிர்வாகிகள் விளக்கம்

செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவையினர்.
செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவையினர்.
Updated on
1 min read

மதுரை: சமஸ்கிருதம் உறுதிமொழியை மொழிபெயர்த்து படித்த விவகாரத்தில் என்ன நடந்தது என்கிற விவரத்தை மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் ஜோதிஷ்குமாரவேல், பொதுச்செயலாளர் வேணுகோபால், துணைத் தலைவர் தீபிகா விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த 30-ம் தேதி முதலாம் ஆண்டுமாணவர்கள் வரவேற்பு விழா நடந்தது. இதில் நாங்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தோம் என்று தகவல் பரப்பப்படுகிறது. அது தவறானது. நாங்கள் சமஸ்கிருதத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட உறுதிமொழியைத்தான் படித்தோம். ஒரிஜினல் சமஸ்கிருதம் உறுதிமொழியை நாங்கள் படிக்கவில்லை.

தேசிய மருத்துவக் கவுன்சில் வழிகாட்டுதலில் மருத்துவக் கல்வியில் புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு `மகிரிஷ் சரகர்' உறுதிமொழியை பரிந்துரை செய்தது. அதேநேரத்தில் இந்த உறுதிமொழியைத்தான் படிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கவில்லை. தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகமும் `இப்போகிரெடிக்' உறுதிமொழியைத்தான் எடுக்க வேண்டும், `மகிரிஷ் சரகர்' உறுதிமொழியை எடுக்கக்கூடாது என்றுஎந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை.

நேற்று முன்தினம் சர்ச்சையானபிறகுதான் தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம் ‘இப்போகிரெடிக்’ உறுதிமொழியைத்தான் எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை வந்திருக்கிறது.

இந்த உறுமொழியை மாணவர் பேரவை முடிவு செய்து படித்தோம். இதற்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும், டீனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த உறுதிமொழியை படிப்பதால் எந்த தவறும் இல்லை என்று நினைத்தே அவர்கள் கவனத்துக்கு நாங்கள் கொண்டு செல்லவில்லை. கடைசி 2 நாளில் விழா ஏற்பாடுகளை செய்திருந்தோம். அவசரத்தில் அந்த உறுதிமொழியை அவர்களிடம் நாங்கள் காட்டவும், அவர்கள் அதைப் பார்க்கவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை.

தேசிய மருத்துவக் கவுன்சில் கடந்த மார்ச் 31-ம் தேதி தான் புதிதாக சேரும் மருத்துவ மாணவர்களுக்கு `மகிரிஷ் சரகர்' உறுதிமொழியை பரிந்துரை செய்தது. இந்த உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in