Published : 03 May 2022 06:20 AM
Last Updated : 03 May 2022 06:20 AM
கோவை: இந்து கடவுள் குறித்து அவதூறாக வீடியோ பதிவு வெளியிட்டுள்ள யு-டியூப் சேனலை முடக்க கோரி காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிவசக்தி அடியார் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கே.அல்லிராஜ் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘யூ டு புரூட்டஸ்’ என்ற யு-டியூப் சேனலில் கடவுள் நடராஜப் பெருமான் குறித்து அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் சுதாகர் என்பவர் பேசி வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ணுற்ற உலகம் முழுவதும் உள்ள சிவனடியார் பெருமக்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்.
அனுதினமும் சிவனைத் துதிக்கும் எங்களைப் போன்ற சிவனடியார்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும், கோபத்தை ஏற்படுத்துவதாகவும் இது உள்ளது. எனவே, இந்த யு-டியூப் சேனலை உடனடியாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மத உணர்வுகளை இழிவுபடுத்தியும், மோதலை உருவாக்கும் வகையிலும் பேசியுள்ள சுதாகரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT