

சென்னை: சென்னை மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட புத்தகரம் ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் மே 19-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்காவிட்டால், சென்னை மாவட்ட ஆட்சியர் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள புத்தகரம் ஏரி 42 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. இந்த ஏரிக்கான வரத்துக் கால்வாய் மற்றும் ஏரிப் பகுதிகள் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாக நாளிதழ் ஒன்றில் கடந்த 2020-ம் ஆண்டு செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய சென்னை மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட அதிகாரி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி, பொதுப்பணி துறை, சென்னை குடிநீர் வாரியம் ஆகிய துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் ஆகியோர் கொண்ட கூட்டுக் குழுவை பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. ஆக்கிமிப்புகளை அகற்ற தொடர்புடைய துறைகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை அளிக்க அந்தக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
பொதுப்பணித் துறை, சென்னை குடிநீர் வாரியம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் ஏற்கெனவே அறிக்கை தாக்கல் செய்திருந்தன. சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கு அமர்வின் நீதித் துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்நிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஏரியின் உண்மையான பரப்பளவு, தற்போது உள்ள பரப்பளவு, செய்தித்தாளில் குறிப்பிட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான விவரங்கள், வருங்காலத்தில் இந்த ஏரியை சீரமைப்பதற்காக வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவற்றிடம் என்ன திட்டம் உள்ளது என்பது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த அறிக்கையை, வழக்கின் அடுத்த விசாரணை நாளான மே 19-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். தாக்கல் செய்யத் தவறினாலும், அதன் பிறகு அறிக்கை தாக்கல் செய்வதாக இருந்தாலும் ரூ.10 ஆயிரம் அபராதத்தை ஆட்சியர் செலுத்த வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.