

கடலூர்: கல்விக் கட்டண குளறுபடி சரி செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த உறுதியின் பேரில், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தள்ளி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசுடைமையாக்கப்பட்ட பின், அதன் கட்டுப்பாட்டில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது. ஆனாலும், அங்கு தொடர்ந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூலிக்கப்பட்டது.
கடந்த கல்வியாண்டில் இதைக் கண்டித்து அங்குள்ள மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்கிடையே, நடப்பு கல்வியாண்டில் இக்கல்லூரியில், முதலாண்டு மாணவர்களுக்கு மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து 2, 3, 4-ம் ஆண்டுகளில் பயின்று வரும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
‘அரசு கல்விக் கட்டணத்தை தான் கட்டுவோம்’ என்று கூறி, கடந்த மாதம்10-ம் தேதி இம்மாணவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 11 நாட்கள் மாலை நேரங்களில் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்படியும் தீர்வு எட்டப்படாத நிலையில், கடந்த 21-ம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாணவர்கள் போராட்டத்தை தள்ளி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாணவர்களின் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் கூறுகையில், “கல்விக் கட்டணம் தொடர்பாக கடந்த 28-ம் தேதி மற்றும் நேற்று முன்தினம் (மே.1) சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத் ஆகியோர் மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் இரு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில், ‘எங்கள்கல்விக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்றும், இதுகுறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்துவிட்டு, சட்டமன்ற கூட்டத் தொடரில் முதல்வரால் அரசு கட்டண அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். இதனால், முதல்வரின் அறிவிப்பு வரும் வரை எங்கள் போராட்டம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்றனர்.