

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி 13-வது முறையாக அமோக வெற்றி பெற்றுள்ளார். திருவாரூர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிட்ட அவர், அதிமுக வேட்பாளர் ஆர்.பன்னீர்செல்வத்தைவிட 68 ஆயிரத்து 366 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கருணாநிதி 1 லட்சத்து 21 ஆயிரத்து 473 வாக்குகளும், ஆர்.பன்னீர்செல்வம் (அதிமுக) 53,107 வாக்குகளும், பி.எஸ்.பழனிச்சாமி (இந்திய கம்யூனிஸ்ட்) 13,158 வாக்குகளும் பெற்றனர்.
கடந்த 1957 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 8,296 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன்பிறகு சைதாப்பேட்டை, அண்ணா நகர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, துறைமுகம் என போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தொடர் வெற்றிகளை பெற்றுவந்தார்.
கடந்த 2011 தேர்தலில் தனது சொந்த மாவட்டமான திருவாரூரில் முதல்முறையாக களமிறங்கிய கருணாநிதி 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் மீண்டும் திருவாரூரில் போட்டியிட்ட கருணாநிதி தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
தமிழக தேர்தல் வரலாற்றில் தொடர்ந்து 13 முறை வெற்றி பெற்று, தோல்வியையே சந்திக்காத தலைவர் என்ற பெருமையை 93 வயதான கருணாநிதி பெற்றுள்ளார்.