Published : 02 May 2022 03:15 PM
Last Updated : 02 May 2022 03:15 PM
சென்னை: "10 , 20 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போமோ, அதைவிடப் பலமடங்கு சாதனையை இந்த ஓராண்டு காலத்தில் செய்திருக்கிறோம்" என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே 2) திமுகவில் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி 3,000-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், " மாற்றுக் கட்சியிலிருந்து இன்றைக்கு விலகி வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால், தமிழகத்தில் ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்று சொன்னாலும், தமிழர்களுக்காக, தமிழகத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் திமுக உற்ற தோழனாக, நம்மை காக்கும் ஒரு பேரியக்கமாக இருக்கிறது என்ற அந்த நம்பிக்கையோடு நீங்கள் எல்லாம் உங்களை இணைத்துக்கொள்ள இங்கே வந்திருக்கிறீர்கள்.
ஏற்கெனவே நம்முடைய ராஜீவ் காந்தி திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு, அவர் ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று அழுத்தந்திருத்தமாக எடுத்து வைக்கும் விவாதங்களை எல்லாம் பார்க்கிறபோது உள்ளபடியே மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அவர் தன்னுடைய ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய விவாதம் தொலைக்காட்சிகளில் நடைபெறுகிறது என்று சொன்னால், விவேகமாகவும், தன்னுடைய கொள்கையிலிருந்து என்றைக்கும் விலகிவிடாமல், ஆற்றலோடு அவர் ஆற்றுகிற அந்தப் பணியை பார்க்கிறபோது, நான் மட்டுமல்ல, கட்சி நிர்வாகிகள் மட்டுமல்ல, அதை பார்க்கிற ஒட்டுமொத்தப் பொதுமக்களும் அவரைப் பாராட்டாதவர்கள் நிச்சயமாக இருக்க முடியாது. அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக தன்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டிருப்பவர்.
அவரைத் தொடர்ந்து இன்றைக்கு இருக்கும் இளைஞர்கள், அதேபோல் நாமும் பணியாற்றிட வேண்டும். கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற அந்த உணர்வை, நீங்கள் முழுமையாக பயிற்சி பெற வேண்டும், அதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளை இந்த நிகழ்ச்சியின் மூலமாக உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். திமுகவின் வரலாறு என்பது 73 ஆண்டு காலம். இன்னும் 2 வருடத்தில் 75-ஆம் ஆண்டு விழாவை நாம் கொண்டாட இருக்கிறோம். தமிழகத்தில் ஐந்து முறை , மறைந்த முதல்வர் கருணாநிதி தலைமையில் ஆட்சி நடத்தி, இப்போது 6-வது முறையாக எனது தலைமையில் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறோம்.
ஆட்சி என்பது ஏதோ நாமெல்லாம் சொகுசாக வாழ்வதற்காக நமக்குக் கிடைத்திருக்கும் பதவி என்று நினைக்காமல், ஆட்சியில் இருந்தால் அதன் மூலமாக நமக்குக் கிடைக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்குத் தொண்டாற்றவும், ஆட்சி இல்லை என்று சொன்னால், நாம் மக்களுக்கு போராட, வாதாட அந்தப் பணியை தொடர்ந்து நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். திமுகவைப் பொறுத்த வரையில் ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்று சொன்னாலும் மக்களுக்காக தொண்டாற்றுகிற, பணியாற்றுகிற ஒரு பேரியக்கம் என்பதை யாரும் மறுத்திட, மறைத்திட முடியாது.
தமிழகத்தில் இருக்கும் தமிழர்களுக்காக மட்டுமல்லாமல், இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்காக மட்டுமல்லாமல், இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களையும் தவிர்த்து அங்கிருக்கும் எல்லா மக்களுக்கும் நாம் துணை நிற்போம் என்று நாம் நம்முடைய கடமையை ஆற்றிக்கொண்டிருக்கிறோம்.
கடந்த ஆண்டு மே 2-ஆம் தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. நாம் அமோகமான வெற்றியை பெற்றுக்கொண்டு வந்து கொண்டிருக்கிறோம் என்ற செய்திகள் வந்துகொண்டிருந்த நேரம் இந்த நேரம்தான்.எனவே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றாலும், அதற்குப் பிறகு 5 நாட்கள் கழித்து மே7-ஆம் தேதி தான் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டது. அந்த ஏழாம் தேதி வரப்போகிறது. ஒரு வருடம் நிறைவடையப்போகிறது. 10 வருடம் , 20 வருடம் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போமோ, அதைவிடப் பலமடங்கு சாதனையை இந்த ஓராண்டு காலத்தில் நாம் செய்திருக்கிறோம்.
இவ்வளவுதானா? என்று கேட்காதீர்கள். இன்னும் செய்யப்போகிறோம்.சட்டமன்றமாக இருந்தாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும், தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நாம் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் ஓர் அரசியல் நோக்கத்தோடு கூறிவருகின்றனர். எனக்கு அதற்கெல்லாம் பதில் சொல்ல நேரமில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நான் பேசும்போது "நல்லது செய்வதற்கே எனக்கு நேரம் கிடைக்கவில்லை. கெட்ட செய்தி சொல்லிக் கொண்டிருக்கும் உங்களுக்கு பதில் சொல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை" என்று சொன்னேன். அதையேத்தான் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். எனவே நம்முடைய கடமை மக்களுக்கு பணியாற்றுவது" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT