Published : 02 May 2022 01:38 PM
Last Updated : 02 May 2022 01:38 PM

சமஸ்கிருத உறுதிமொழி வாசிக்கப்பட்டதா? - மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவை நிர்வாகிகள் விளக்கம்

மதுரை: சமஸ்கிருத உறுதிமொழியை மொழிப்பெயர்த்து படித்த விவகாரத்தில் என்ன நடந்தது என்ற விவரத்தை மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் ஜோதிஷ் குமாரவேல், பொதுச் செயலாளர் வேணுகோபால் துணைத் தலைவர் தீபிகா விஸ்வநாதன் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் இன்று (மே 2) செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், "மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த 30 ஆம் தேதியன்று முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் வரவேற்பு விழா நடந்தது. இந்த விழாவில் நாங்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தோம் என்று செய்திகள் பரப்பப்படுகிறது. அது தவறானது. சமஸ்கிருத மொழியில் இருந்த உறுதிமொழியை நாங்கள் படிக்கவில்லை. சமஸ்கிருதத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட உறுதிமொழியைத்தான் நாங்கள் படித்தோம்" என்றனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் மாணவர்கள் அளித்த பதில்கள் வருமாறு:

கேள்வி: எந்த மொழியில் உறுதிமொழி எடுத்தீர்கள் என்பது இப்போது சர்ச்சையில்லை, அதில் உள்ள கருத்துகள் சமஸ்கிருதம் மொழியில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டவைதான் என்பதே இப்போது சர்ச்சையாக உள்ளது.

மாணவர்கள்: "தேசிய மருத்துவக் கவுன்சில் பாடத்திட்டத்தைத்தான் மருத்துவக் கல்லூரியில் பின்பற்றுகிறோம். தேசிய மருத்துவக் கவுன்சில் வழிகாட்டுதலில், புதிதாக மருத்துவக் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மகிரிஷ் சரக் சப்த் உறுதிமொழியை பரிந்துரை செய்துள்ளனர். அதேநேரத்தில் இந்த உறுதிமொழியைத்தான் படிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு ஏதும் விதிக்கவில்லை. தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகமும் ‘இப்போகிரெடிக்’ உறுதிமொழியைத்தான் எடுக்க வேண்டும், மகரிஷ் சரக்சப்த் உறுதி மொழியை எடுக்கக்கூடாது என்று எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை.

இதனால், நேற்று முன்தினம் உறுதிமொழியேற்பு சர்ச்சையானபிறகுதான் தமிழக மருத்துவக்கல்வி இயக்குநரகம் தரப்பிலிருந்து ‘இப்போகிரெடிக்’’ உறுதிமொழியைதான் எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை வந்திருக்கிறது.

அதனால், நாங்கள் யதார்த்தமாக தேசிய மருத்துவக் கவுன்சில் பரிந்துரை செய்த மகிரிஷ் சரக்சப்த் உறுதிமொழியை முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவில் படித்தோம். இந்த உறுமொழியைப் படிக்க வேண்டும் என்பதை மாணவர் பேரவையே முடிவு செய்தது. இதற்கும் கல்லூரி நிர்வாகத்திற்கும், டீனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் இந்த உறுதிமொழியைப் படிப்பதால் எந்தத் தவறும் இல்லை என்று நினைத்தே அவர்கள் கவனத்திற்கு நாங்கள் கொண்டு செல்லவில்லை.

கேள்வி: மருத்துவக்கல்வி விழாக்களை ஒருங்கிணைக்க பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு ஒன்று இருக்கிறது, அந்தக் குழு ஒப்புதல் வழங்கியப்பிறகுதான் விழாவின் அழைப்பிதழ் முதலான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் நிலையில் இந்த உறுதிமொழி மட்டும் எப்படி அவர்கள் கவனத்திற்கு செல்லாமல் இருந்தது?

கடைசி 2 நாளில் விழா ஏற்பாடுகளை செய்திருந்தோம். அவசரத்தில் அந்த உறுதிமொழியை அவர்களிடம் நாங்கள் காட்டவும், அவர்கள் அதனைப்பார்க்கவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை.

கேள்வி: கடந்த காலங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நீங்கள் கூட ‘இப்போகிரெடிக்’ உறுதிமொழியைதானே எடுத்து இருப்பீர்கள், பிறகு எப்படி இந்த விழாவில் மட்டும் மகிரிஷ் சரக்சப்த் உறுதிமொழி மாறியது?

கடைசியாக தேசிய மருத்துவ கவுன்சில் கடந்த மார்ச் 31 (2022) அன்றுதான் புதிதாக சேரும் மருத்துவ மாணவர்கள் மகிரிஷ் சரக்சப்த் உறுதிமொழியை பரிந்துரை செய்தது. அதனால், அந்த அப்டேட் அடிப்படையில் இந்த உறுதிமொழியை எடுத்தோம்.

கேள்வி: மாணவர்கள் நீங்கள் தெரிந்தும் தெரியாமல் நடைமுறைகளை மாற்றலாம், ஆனால் அதை விழா ஏற்பாடுகளை இறுதி செய்யக்கூடிய ஆலோசனைக்குழு எப்படிப் பார்க்காமல் விட்டார்கள்?

மருத்துவக்கல்வி படித்து முடிக்கும் மாணவர்கள்தான் பெரும்பாலும் இதுபோன்ற உறுதிமொழியை எடுப்பார்கள். அதனால், பேராசிரியர்கள் யாரும் இந்த உறுதிமொழி விவகாரத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

கேள்வி: மற்ற மருத்துவக் கல்லூரிகளில் சமீபத்தில் நடந்த இதுபோன்ற வரவேற்பு நிகழ்ச்சிகளில் இதே மகிரிஷ் சரக்சப்த் எடுத்தார்கள்?

அதைப்பற்றி எங்களுக்கு எதுவும் தெரியவில்லை.

கேள்வி: குறிப்பிட்ட இந்த உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று யாரும் அழுத்தம் கொடுத்தார்களா?

எந்த அழுத்தமும் யாரும் கொடுக்கவில்லை. முழுக்க முழுக்க நாங்கள் அவசரத்தில் முடிவு செய்த விஷயம்.

இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.

சர்ச்சையும் கேள்விகளும்: சமஸ்கிருதம் மொழிக் கருத்தை உறுதிமொழி எடுக்கக்கூடாது என்று தமிழக அரசும், தமிழக மருத்துவக்கல்வி இயக்குநரகமும் மிகுந்த கவனமாக இருக்கும் நிலையில் ஏன் இதற்கு முன் ‘இப்போகிரெடிக்’ உறுதிமொழியைதான் படிக்க வேண்டும், மகிரிஷ் சரக்சப்த் உறுதிமொழியை படிக்கக்கூடாது என்ற வழிகாட்டுதல் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், இதுபோன்ற விவகாரங்களில் தவறு அடிமட்டத்தில் இருந்து நடந்திருக்கிறது. அனைத்து விவகாரங்களையும் ‘டீன்’ மட்டுமே பார்க்க வேண்டும் என்பதில்லை, அவர்களுக்கு கீழ்நிலை அதிகாரிகள், பேராசிரியர்கள் இந்தத் தவறு நடக்கும் வரை என்ன செய்து கொண்டிருந்தார்கள், அதற்கான விசாரணையை மேற்கொள்ளாமல் மேலோட்டமாக ‘டீன்’ மீது மட்டுமே நடவடிக்கை எடுத்திருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அப்படியென்றால் இந்த விவகாரத்தின் பின்னணியில் நடவடிக்கைக்கு ஆளான டீனை பிடிக்காதவர்கள் தவறு நடப்பதை வேடிக்கைப்பார்த்தார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதனால், தமிழக மருத்துவக்கல்வி இயக்குநரகம் முழு விசாரணை மேற்கொண்டு மேலும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x