

மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்று மாற்றத்தை ஏற்படுத்தும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா தெரிவித்தார்.
தேமுதிக- தமாகா- மக்கள் நலக் கூட்டணி சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தமயந்தி திருஞானத்தை ஆதரித்து நேற்று மாலை அவர் பேசியது: தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை. இது, காலத்தின் கட்டாயம். அதிமுகவுக்கு மாற்று திமுக அல்ல. மக்களின் ஆதரவால் மக்கள் நலக் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெற்று மாற்றத்தை நிகழ்த்தும்.
நாட்டில், வேலையின் மையே இன்றைய பெரிய பிரச்சினையாக உருவெடுத் துள்ளது. தமிழகத்தில் சுமார் 1 கோடி பேர் வேலையில்லாமல் தடுமாறிக் கொண்டிருக் கின்றனர். விவசாயிகள் தற்கொலையைப் போலவே, தகவல் தொழில்நுட்பத் துறையிலும் பலர் வேலை இழந்து தற்கொலை செய்யும் மனநிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.
பண பலம் தேர்தல் முறையை மட்டுமல்ல, ஜனநாயகத்தையும் சீரழிக்கிறது. பணத்தைக் கொண்டு ஜனநாயகத்தை விலைக்கு வாங்கலாம் என அதிமுகவும், திமுகவும் நினைக்கின்றன. இவர்களுடன், தற்போது பாஜகவும் சேர்ந்து விட்டது. தமிழக மீனவர்கள் பற்றி நாங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தபோது கண்டுகொள்ளாத மோடி, தேர்தலுக்காக தமிழக மீனவர்களைக் காப்போம் என்கிறார். இவர்களின் ஏமாற்று வேலைகளை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்றார்.