

மக்கள் நலக் கூட்டணி நாளுக்கு நாள் ஏறுமுகமாகி மே 19-ல் வெற்றி முகம் காணப்போகிறது என்று தருமபுரி பிரச்சாரத்தில் ஜி.கே.வாசன் பேசினார்.
மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தருமபுரி மற்றும் காரிமங்கலம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். தருமபுரியில் ராஜகோபால் பூங்கா அருகில் நடந்த கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்கள் இளங்கோவன் (தருமபுரி), நஞ்சப்பன் (பென்னாகரம்), பாஸ்கர் (பாப்பிரெட்டிப்பட்டி), கோவிந்தசாமி (அரூர்) ஆகியோருக்கு வாக்கு சேகரித்து வாசன் பேசியது:
50 ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக கட்சிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல் இது. தற்போதைய அவசியம் ஆட்சி மாற்றம்தான்.
இதன் அர்த்தம் இரு திராவிடக் கட்சிகளிடமும் மாறி மாறி ஆட்சியை தருவது என்பதில்லை. மக்கள் மீது அக்கறை கொண்ட மக்கள் நலன் காக்கும் கூட்டாட்சி என்ற மாற்றம்தான் அது.
திமுக, அதிமுக போல மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளிக்காத கட்சியும் மக்கள் நலக் கூட்டணி தான். தற்போது ஏறுமுகத்தில் உள்ள நமது மக்கள் நலக் கூட்டணி மே 19-ம் தேதியன்று வெற்றிமுகம் காணப்போகிறது. வழக்குகள் இல்லாத, ஊழல் வழக்குகளில் சிறை செல்லாத தலைவர்களைக் கொண்ட கூட்டணி இது.
இவ்வாறு அவர் பேசினார்.