Published : 02 May 2022 07:08 AM
Last Updated : 02 May 2022 07:08 AM
சென்னை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கான உறுதிமொழி மாறிய விவகாரத்தில், அக்கல்லூரியின் டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டசெய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் புதிதாக சேரும் மாணவர்கள் மற்றும் மருத்துவக் கல்வி முடித்து பயிற்சியில் சேரும் மாணவர்கள் இப்போகிரேடிக் உறுதிமொழி (Hippocratic Oath) எடுத்துக் கொள்வர். அனைத்து மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் தொடங்கிய காலத்தில் இருந்து இது பின்பற்றப்படுகிறது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று (நேற்று முன்தினம்) புதிய மாணவர்களுக்கு வெள்ளை அங்கிஅணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக்சப்த் எனும் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஏ.ரத்தினவேல், பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகிறார். தன்னிச்சையாக விதிமுறையை மீறி இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழியை மாணவர்களிடம் எடுக்க வைத்ததற்கு துறை ரீதியாக விசாரணை நடத்த மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபுவுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் எப்போதும் பின்பற்றப்படும் இப்போகிரேடிக் உறுதிமொழியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என மருத்துவக் கல்விஇயக்குநர் மூலம் அறிவுறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT