Published : 02 May 2022 06:39 AM
Last Updated : 02 May 2022 06:39 AM
கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலத்தில், துணை வட்டார வளர்ச்சி அலுவலரை கிராமசபைக் கூட்டத்தில் தாக்கிய புகாரில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டார்.
காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் கண்காணிப்பு அலுவலராக பங்கேற்றார். கூட்டம் தொடங்கிய உடன் ஊராட்சி செயலர் வரவு செலவு கணக்கை வாசித்துள்ளார். அப்போது திடீரென எழுந்த ஊராட்சிமன்றத் துணைத்தலைவர் சரண்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் அமர்ந்திருந்த இடத்துக்கு சென்றார். அவரது பின் பக்கத்தில் இருந்து, தனது காலில் போட்டிருந்த காலணியை கழற்றி அவரை தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை தாக்கிய, ஊராட்சிமன்றத் துணைத் தலைவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சமாதானம் பேச வந்த சேத்தியாதோப்பு டிஎஸ்பி சுந்தரம், காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ஏழுமலையையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததால் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
இந்நிலையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், தன்னை ஊராட்சிமன்றத் துணைத்தலைவர் சரண்யா பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதாக காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து சரண்யாவை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT