

கோவை: கோவை-கண்ணூர் இடையே இரு மார்க்கத்தில் இயக்கப்படும் முன்பதில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் (எண்:16607,16608) நேற்று முதல் தனி இன்ஜின் இல்லாத ‘மெமு’ ரயிலாக மாற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “இதுவரை இந்த ரயில் ஒவ்வொரு முறை கோவைக்கு வரும்போதும், புறப்பட்டுச் செல்லும்போதும் இன்ஜினை முன்னும், பின்னும் மாற்றி, மாற்றி பொருத்த வேண்டியிருந்தது.
மெமு ரயிலில் தனியே இன்ஜின் இருக்காது. இது சென்னை புறநகர் மின்சார ரயில்போன்றது. எனவே, இன்ஜினை பொருத்தும் நேரம் மற்றும் எரிபொருள் செலவு இனி மிச்சமாகும். அதிகபட்சம் 90 கி.மீ வேகத்தில் இந்த ரயில் இயக்கப்படும். இந்த ரயிலில் பயணிகள் உட்காரவும், கூடுதல் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்கவும் அதிக இடவசதி இருக்கும். மொத்தம் 12 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலால் வேகமாக புறப்பட முடியும். ஓட்டுநர் நினைத்த இடத்தில் விரைவாக நிறுத்தவும் முடியும்” என்றனர்.