

கோவை: சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என எம்எல்ஏவும், பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பு சார்பில் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் நேற்று நடைபெற்ற ‘நலம்’ இலவச மருத்துவ முகாமை தொடங்கிவைத்த பிறகு வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த இலவச மருத்துவ முகாமில் 8 விதமான பிரிவுகளில் பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்பிறகு, நோயாளிகளுக்கு எந்த சிகிச்சை தேவையோ, அந்த சிகிச்சைக்கு தேவையான உதவிகளை அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவசமாக பெற உதவி செய்யப்படும். எந்த சிகிச்சைக்கு காப்பீடு இல்லையோ அதற்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க ஒரு தனியார் மருத்துவமனை நிர்வாகம் முன்வந்துள்ளது. இந்த சேவையை கோவை தெற்குதொகுதியின் ஒவ்வொரு பூத் வாரியாக எடுத்துச் செல்ல மக்கள் சேவை மையம் மூலம் ஏற்பாடு செய்து வருகிறோம்.
சட்டப்பேரவை ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும். அத்தனைபேரின் கருத்துகளையும் அங்கு எதிரொலிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். நிறைய நேரங்களில் எனது கருத்துகளை முழுமையாக சொல்ல வாய்ப்பு கிடைப்பதில்லை. சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பில் கேள்வி நேரத்தை மட்டும் ஒளிபரப்புகின்றனர். அப்போதும்கூட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசும்போது தொழில்நுட்பக்கோளாறு என்று போட்டுவிடுகின்றனர். நான்கு விஷயங்களை பேசினால் ஒரு விஷயத்தை மட்டும் காண்பிக்கின்றனர். எனவே, சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலையாக ஒளிபரப்பு செய்ய வேண்டும். சபை குறிப்பிலிருந்து நீக்கப்படும் விஷயங்களை மட்டும் நீக்கிவிட்டு, அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்கள் பேசிய முழு வீடியோவை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.