

திருப்பூர்/கோவை: அனைத்து தரப்பு மக்களின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் ஊராட்சிகள் முன்மாதிரியாக விளங்க வேண்டும் என, கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வலியுறுத்தினார்.
தொழிலாளர் தினமான நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 265 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
வெள்ளகோவில் ஒன்றியம் வள்ளியரச்சல் ஊராட்சி கணபதிபாளையத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டார். அவர் பேசும்போது, “நாட்டின் எதிர்காலம் கிராமங்களில்தான் உள்ளது என்ற காந்தியடிகளின் கருத்துக்கேற்ப, அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதிலும், இயற்கை வள ஆதாரங்களை பாதுகாப்பதிலும், அனைத்து தரப்பு மக்களின் சமூக பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் ஊராட்சிகள் முன்மாதிரியாக விளங்க வேண்டும். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக செயல்படுத்தப்படும் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற இளைஞர்களுக்கு (18 முதல் 35 வயதுடையவர்கள்) வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பம் உள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்” என்றார்.
கிராம சபை கூட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான கடன் உதவியை அமைச்சர் வழங்கியதுடன், பல்வேறு திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்தார். திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல குழுத் தலைவர் இல.பத்மநாபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட மாவுத்தம்பதி பழங்குடியின கிராமத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பார்வையாளராக கலந்துகொண்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பேசும்போது, “கிராம சபைக் கூட்டங்களில் வரவு, செலவு கணக்குகள், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவை விவாதிக்கப்படும்.
இதில் அந்தந்த ஊராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். அரசு திட்டங்களின் மீது பொதுமக்களின் கண்காணிப்பு அவசியம்” என்றார். அதைத்தொடர்ந்து, மாவுத்தம்பதி, சின்னாம்பதி உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச்சான்று பெறாத நிலையில் இருந்ததால், அவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சிறப்பு குறைதீர் முகாம் நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார். முன்னதாக பள்ளி மாணவிகளிடம் சைல்டு லைன் எண் 1098 குறித்து ஆட்சியர் விளக்கியதுடன், தனது செல்போன் எண்ணிலிருந்து அழைத்து பரிசோதித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முருகேசன், வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ, மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சித்ராதேவி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ராம்குமார், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பெருமாள்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.