உடுமலை அருகே மயானத்துக்கு செல்லும் பாதையில் தெருவிளக்கு கோரி 50 ஆண்டுகளாக போராடும் மக்கள்
உடுமலை: உடுமலை - தாராபுரம் சாலையில்துங்காவி ஊராட்சி உள்ளது.மடத்துக்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட இவ்வூராட்சியில் குமாரமங்கலம், பெங்களூரு, பாறையூர்,சீலநாயக்கன்பட்டி, வெங்கிட்டாபுரம், வஞ்சிபுரம், மலையாண்டி பட்டணம் உள்ளிட்ட 10 கிராமங்கள் உள்ளன. 10,000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
தாய் கிராமமான துங்காவியில் மட்டும் 3,000 பேர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் மயானம் உள்ளது. அங்கு கடந்த 50 ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர். பிரதான சாலையிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் சாலையில் சுமார் 500 மீட்டர் தொலையில் இம்மயானம் உள்ளது. மயானத்தில் மட்டும் ஒரே ஒரு தெருவிளக்கு வசதி உள்ளது.
இதுதொடர்பாக மக்கள் கூறும்போது, ‘‘பெரும்பாலான நேரங்களில் மின்விளக்கு பழுதாகிவிடுவதால், தீப்பந்தம் ஏற்றி உடல்களை அடக்கம் செய்யும்நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் ஊராட்சி, ஒன்றிய நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
ஊராட்சி தலைவர் உமாதேவி காளீஸ்வரனிடம் கேட்டபோது, "கிராம மக்களின் புகார் உண்மைதான். அங்கு 6 இடங்களில் தெருவிளக்குகள் அமைக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால், ஒரே ஒரு கம்பம் நடுவதற்கு மட்டுமே ஊராட்சிதலைவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான கம்பங்கள் அமைக்க ஆட்சியர் அனுமதி வேண்டும். நியாயமான கோரிக்கையாக இருந்தும், ஊராட்சியால் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. இருப்பினும், உரிய வழிவகையில் முயற்சி செய்து தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
