

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே செல்லப்பம்பாளையம் ஊராட்சியில் 3000-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள். அங்குள்ள மிகவும் பழமை வாய்ந்த அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் 250 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 8 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
ஓடு வேயப்பட்ட ஒரு கட்டிடமும், 2 கான்கிரீட் கட்டிடமும் உள்ளது. அதில் தான் முதல் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக முறையாக பராமரிக்கப்படாத கழிவறையை பயன்படுத்தியதால், சில மாணவர்களுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டினர். கழிவறையை பராமரிக்க பணியாளர் இல்லாததால்தான் அசுத்தமாக இருப்பதாக பள்ளி நிர்வாகிகள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அப்பள்ளி வளாகத்தில் பல லட்சம் செலவில் கட்டித் தரப்பட்ட கழிவறையை பயன்படுத்த அனுமதிக்காமல் பூட்டியே வைத்திருப்பது குறித்தும் பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவரின் தந்தை கூறும்போது, "எனது இரண்டு மகன்களும் தனியார் பள்ளியில் படித்து வந்தனர். அரசு பள்ளிகளில் எனது குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற விருப்பத்தின்பேரில் சேர்த்துள்ளேன். கல்வி கற்று தருவதில் எந்த குறையும் இல்லை.
ஆனால், சுகாதாரமற்ற கழிவறையை பயன்படுத்தியதால் இருவரும் பாதிக்கப்பட்டு, 15 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேபோல, மேலும் சில குழந்தைகளும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
பள்ளியை பராமரிக்க அரசு நிதிஒதுக்கியும், அதனை முறையாக செலவு செய்வதில்லை. பழமையான ஓட்டு கட்டிடத்தில் இருந்து ஓடுகள் உடைந்து விழுகின்றன. பாம்புகள் நடமாட்டமும் உள்ளது. மாணவர்களின் நலனுக்காக அரசு பல லட்சம் செலவு செய்து கட்டி கொடுத்துள்ள கழிவறை பூட்டிவைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிக்கு வரும் பெற்றோரிடமிருந்து பணமாகவோ, பொருளாகவோ தர வேண்டும் என பள்ளி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
இருப்பினும், 25 நாற்காலிகள் வாங்கி கொடுத்தும், மாணவர்கள் பழுதடைந்த இரும்பு இருக்கைகளில் அமரவைக்கப்படுகின்றனர். இதனால் மாணவர்களுக்கு காயம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற அவலங்களால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமாயின், பள்ளி நிர்வாகமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும், அரசுப் பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து, இதுபோன்ற குறைபாடுகளை களைய முன்வர வேண்டும்" என்றார்.
பள்ளி தலைமையாசிரியர் பழனிசாமி கூறும்போது, "புதிய கழிவறைக்கு செல்லும் குழாய் சேதமடைந்திருப்பதால், அதனை பயன்படுத்தவில்லை.
நேற்று முன்தினம் ஓடு விழுந்த வகுப்பறையை பராமரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. தனியார் பள்ளிகளில் இருந்து வரும் பெற்றோர் விருப்பப்பட்டு தரும் பொருட்களை பெற்றுக் கொள்கிறோம். யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை" என்றார்.