

ஈரோடு: பெருந்துறை அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய், மகன் உயிரிழந்தனர். நாமக்கல் கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் சிங் (38). பர்னிச்சர் வியாபாரி. இவர் தனது தாய் தாராபாய் (55), மனைவி திவ்யா (25) மற்றும் மகள்கள் இருவருடன் காரில், அவிநாசியில் உள்ள கோயிலுக்கு, நேற்று முன்தினம் காரில் சென்றார்.
பின்னர், மாலையில் நாமக்கல்லுக்கு காரில் புறப்பட்டார். கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிகோயில் சாலை அருகே நிறுத்தியிருந்த லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ் சிங் உயிரிழந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவரது தாய் தாராபாய் உயிரிழந்தார். காரில் இருந்த திவ்யா மற்றும் அவரது மகள்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.