

சேலம் / நாமக்கல் / ஈரோடு: பொதுமக்களின் தேவைகள் அறிந்து திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என கிராம சபைக் கூட்டத்தில் சேலம் ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.
தொழிலாளர் தினத்தையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள 385 கிராம ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபைக் கூட்டம் நடந்தது. அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அருநூத்துமலை கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சேலம் ஆட்சியர் கார்மேகம் பார்வையாளராக கலந்து கொண்டு கூறியதாவது:
கூட்டத்தில், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் திட்ட அறிக்கை முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டு, அரசின் முக்கிய திட்டங்கள் குறித்த விளக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இப்பகுதிக்கு சாலை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் தேவைகளை அறிந்து திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் சாந்தி, சேலம் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி, அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி செந்தில்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கீதா பிரியா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) சத்யபாலகங்காதரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மணிவாசகம், அட்மா குழு தலைவர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சிராஜூதீன், ஆலடிப்பட்டி ஊராட்சித் தலைவர் ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும்
நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வசந்தபுரம் ஊராட்சி வேப்பநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் எஸ்.விஸ்வநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பங்கேற்றுப் பேசியதாவது:
கிராம சபைக்கூட்டங்களில் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு, தங்களுக்கான திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் சுற்றுச்சூழலை மேம்படுத்த பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும், என்றார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், மகளிர் திட்ட இயக்குநர் மா.பிரியா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அசோகன், நாமக்கல் கோட்டாட்சியர் த.மஞ்சுளா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் முத்துசாமி பங்கேற்பு
ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் உள்ள 225 ஊராட்சிகளிலும் நேற்று கிராமசபைக் கூட்டம் நடந்தது. கதிரம்பட்டி மற்றும் சின்னமேடு ஊராட்சியில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்றார்.
அமைச்சர் முத்துசாமி பேசும்போது, கிராம சபைக் கூட்டங்களில் பெறப்படும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஈரோடு சிக்கைய்ய நாயக்கர் கல்லூரியை அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. இக்கல்லூரிக்குச் சொந்தமான 54 ஏக்கர் நிலத்தில், விளையாட்டு மைதானம், இந்திய ஆட்சிப்பணி அகாடமி மற்றும் நூலகம் போன்றவை அமைக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது, என்றார். கூட்டத்தில், அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் நவமணி கந்தசாமி, துணை மேயர் செல்வராஜ், ஈரோடு ஒன்றியத் தலைவர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல், மொடக்குறிச்சி ஒன்றியம் துய்யம்பூந்துறை ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி பங்கேற்றார்.