Published : 02 May 2022 06:34 AM
Last Updated : 02 May 2022 06:34 AM
கிருஷ்ணகிரி / ஓசூர் / தருமபுரி: குழந்தைத் திருமணங்களை முற்றிலும் தடுக்க வேண்டும் என கிராம சபைக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வலியுறுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளில் நேற்று கிராம சபைக் கூட்டம் நடந்தது. பாரூர் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்துக்கு தலைமை வகித்து கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி பேசும்போது, “பாரூர் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம் ரூ.12 லட்சம் மதிப்பில் சீர் செய்யப்பட்டு மாணவர்களின் பயன் பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. குழந்தைத் திருமணத்தை முற்றிலும் தடுக்க வேண்டும். இக்கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்” என்றார்.
கூட்டத்தில், பொது நிதியில் இருந்து 2021-ம் முதல் 2022-ம் ஆண்டு வரை மேற்கொண்ட செலவின அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு வாசிக்கப்பட்டது. வளர்ச்சிப்பணிகள் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
கூட்டத்தில் திட்ட இயக்குநர் மலர்விழி, மாவட்ட ஊரக வாழ்வாதாரத் திட்ட இயக்குநர் ஈஸ்வரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வெங்கடாசலம், வேளாண் இணை இயக்குநர்ராஜேந்திரன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்) கிருஷ்ணமூர்த்தி, ஆவின் பொதுமேலாளர் வசந்தகுமார், தாட்கோ பொது மேலாளர் யுவராஜ், நாகோஜனஹள்ளி பேரூராட்சித் தலைவர் தம்பிதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நல்லூர் ஊராட்சியில்
ஓசூர் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவர் சாந்தா வீரபத்ரா தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ் பங்கேற்றார்.
கூட்டத்தில் நல்லூர், அனுமந்தநகர், பெத்தஎலசகிரி, மடிவாளம், சித்தனப்பள்ளி, செக்போஸ்ட் பகுதி, சமத்துவபுரம், ராஜாஜிநகர் ஆகிய கிராமங்களில் குறைந்தழுத்த மின் விநியோகத்தை சீர் செய்ய வேண்டும், சக்திநகர் பிரதானச் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆலை அமைக்க எதிர்ப்பு
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251ஊராட்சிகளில் நேற்று கிராம சபைக் கூட்டம் நடந்தது. பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் மாங்கரை ஊராட்சியில் நடந்த கிராம சபைக்கூட்டத்துக்கு, ஆட்சியர் திவ்யதர்சினி தலைமை வகித்து பேசும்போது, “அங்கன்வாடி மையத்தில்குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாத்திட முன்னோடி வட்டாரமாக பென்னாகரம் வட்டாரத்தை தேர்வு செய்து குழந்தைகளுக்கு எள்ளு மிட்டாய் வழங்கப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்” என்றார்.
இதேபோல, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பாப்பம்பாடி ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், பாப்பம்பாடி பகுதியில் 2 கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. பண்ணையால் துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில், பண்ணைக்கு அருகில் தற்போது மரவள்ளிக் கிழங்கு அரவை ஆலை புதிதாக தொடங்கப்பட உள்ளது. ஆலை தொடங்கினால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். எனவே, ஆலை அமைக்க அரசு தடை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT