Published : 02 May 2022 06:32 AM
Last Updated : 02 May 2022 06:32 AM

குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று சின்ன கலைவாணர் விவேக் சாலை என பத்மாவதி நகர் பிரதான சாலை பெயர் மாற்றம்: தமிழக அரசாணை வெளியீடு

விவேக்

சென்னை: சென்னையில் நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, சின்ன கலைவாணர் விவேக் சாலை என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக். மக்களால் `சின்னக் கலைவாணர்' என்று அழைக்கப்பட்ட விவேக் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவு திரையுலகத்தினரையும், மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்றுக் கொண்ட விவேக் சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார். விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த மாதம் 17-ம் தேதி அனுசரிக்கப்பட்டது.

கடந்த மாதம் 25-ம் தேதி விவேக் மனைவி அருட்செல்வி தனது மகள் அமிர்தாநந்தினி மற்றும் விவேக் பசுமை கலாம் இயக்கத்தின் நிர்வாகிகள் முருகன், லாரன்ஸ், அசோக் ஆகியோருடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென்று கோரிக்கை கடிதம் கொடுத்தார்.

அந்த கோரிக்கையை ஏற்ற முதல்வர் உடனே அரசாணை வெளியிடுமாறு உத்தரவிட்டார். இந்நிலையில், விவேக் நினைவாக, அவர் வசித்து வந்த பத்மாவதி நகர் பிரதான சாலை “சின்ன கலைவாணர் விவேக் சாலை” என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நடிகர் விவேக்கின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு, அவரது பெயரை வைக்க அரசாணை வெளியிட முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சின்னக் கலைவாணர் விவேக் சாலை பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி வரும் 3-ம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x