Published : 02 May 2022 06:56 AM
Last Updated : 02 May 2022 06:56 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலாளர் தின கிராம சபை கூட்டம்: நடுவீரப்பட்டு, சோமங்கலம் கிராமங்களில் தலைமை செயலாளர் இறையன்பு பங்கேற்பு

சோமங்கலம் கிராமத்தில் ஆலமரத்தடியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, ஆட்சியர் ஆர்த்தி மக்களுடன் தரையில் அமர்ந்து பங்கேற்றனர்.படம்: எம்.முத்துகணேஷ்

தாம்பரம்: தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், நடுவீரப்பட்டு மற்றும் சோமங்கலம் கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று, மக்களோடு மக்களாய் தரையில் அமர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கூட்ட நடவடிக்கைகளை கண்காணித்தார்.

கடந்த நிதி ஆண்டுக்கான வரவு, செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பெரிய பதாகையாக வைக்கப்பட்டிருந்தது.

நடுவீரப்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மு.சுப்ரமணி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ரேஷன் கடை அமைத்துத் தர வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள சுடுகாட்டை மீட்க வேண்டும். குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். குறைந்த மின் அழுத்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனர். கூட்டத்தின் முடிவில் தூய்மை காவலர்களை தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

இதேபோல் சோமங்கலம் கிராமத்தில் தலைவர் ஜெ.ஆரிக்கம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின்போது, கிராமத்தில் நன்றாக உள்ள சாலையே மீண்டும் போடப்படுகிறது; சாலை இல்லாத பகுதிக்கு சாலை அமைக்கவில்லை. ஜல் ஜீவன் திட்டத்தை நிறைவேற்றியும் குடிநீர் விநியோகம் சீராக இல்லை. இளைஞர்கள், சிறுவர்கள் விளையாட பூங்கா வசதி வேண்டும்.

சமுதாயக் கூடம் வேண்டும். 11 தார் பிளான்ட் உள்ளதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. பசுமை தீர்ப்பாயம் தார் பிளான்டை அகற்ற உத்தரவிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்தனர். கூட்டத்தில் புகார் தெரிவித்தவர்களுக்கும் ஊராட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இறுதியாகப் பேசிய தலைமைச் செயலாளர் இறையன்பு கிராமத்தில் பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இந்த மாதத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும். இதில், பொதுமக்கள் பங்கேற்று எழுத்துப்பூர்வமாக தங்கள் புகார்களை அளிக்க வேண்டும். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புகாரின் மீது ஆய்வு மேற்கொண்டு உரிய தீர்வு காண்பார்கள். சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்றார்.

மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, பெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.தேவி, அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x