Last Updated : 02 May, 2022 07:09 AM

 

Published : 02 May 2022 07:09 AM
Last Updated : 02 May 2022 07:09 AM

திருவள்ளுவர் பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் உள்ளூர் மக்களுக்கு பால் விற்பனை செய்வதில் தயக்கம்: பால் கிடைக்காமல் பாதிக்கப்படுவதாக மக்கள் புகார்

திருக்காலிமேடு திருவள்ளுவர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க டிப்போவில் பால் வாங்குவதற்காக காத்திருக்கும் உள்ளூர் மக்கள்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, பிஎஸ்கே தெருவில் இயங்கி வரும் திருக்காலிமேடு திருவள்ளுவர் பால்உற்பத்தி சங்கத்தில் 700 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், முருகன் நகர், அசோக் நகர்,ஆதிசங்கரர் நகர் உட்பட 17 இடங்களில் பால் டிப்போக்கள் அமைத்து1 லிட்டர் பால் ரூ.32-க்கு கொள்முதல்செய்யப்பட்டு, ரூ.36-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக, 17 ஊழியர்கள் மற்றும் 6 ஒப்பந்த ஊழியர்கள் பணிபுகின்றனர்.

சங்கத்தில் நாள்தோறும் 4 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. டிப்போவில் ஒரு மாதத்துக்கான முன்பணம் செலுத்தி, பால் அட்டை பெற்றும், தினமும் பணம் வழங்கியும் உள்ளூர்மக்கள் பால் வாங்கிச் செல்கின்றனர். இதன்மூலம், நாள் ஒன்றுக்கு சராசரியாக 2,500 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஆவின் நிறுவனத்துக்கு 1,500 லிட்டர் பால் அனுப்பப்படுகிறது. தினமும் 2 முதல் 3 ஆயிரம் லிட்டர் பால் விற்பனையின் மூலம் பால் கூட்டுறவு சங்கம் லாபத்தில் இயங்கி வருகிறது. மேலும், வங்கிக் கணக்கில் சுமார் ரூ.1 கோடி இருப்பில் உள்ளதாகவும். இதற்கு, ஜிஎஸ்டி மற்றும் வருமான வரிசெலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் செய்யப்படும் பால் முழுவதையும், ஆவின் நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும் என காஞ்சிபுரம் சரக பால்வளதுணை பதிவாளர் வாய்மொழி உத்தரவின்பேரில், ஆவின் நிறுவனத்துக்கு பால் அனுப்பப்படுவதால் உள்ளூர் மக்கள் பால் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, முருகன் நகர் பகுதி மக்கள் கூறியதாவது: தினக்கூலிக்கு பணியாற்றும் நாங்கள் முன் பணம் செலுத்தி பால் அட்டைபெறமுடியவில்லை. அதனால், தினமும் பணம் வழங்கி பால் வாங்குகிறோம். தற்போது அட்டை வைத்துள்ளவர்களுக்கு குறைந்த அளவில் பால் விற்பனை செய்யப்படுகிறது, அட்டையில்லாதவர்களுக்கு பால் விற்கப்படாததால்குழந்தைக்கு பசும்பால் வாங்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம், ஆனால், ஆவின் நிறுவனத்துக்கு 3 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்கின்றனர் என்றனர்.

இதுகுறித்து, கூட்டுறவு சங்கத்துக்கு பால் வழங்கும் உறுப்பினர்கள் சிலர் கூறியதாவது: பால் கூட்டுறவு சங்கம் லாபத்தில் இயங்குவதால் ரூ.29 முதல் ரூ.32 என்ற குறைந்த விலையில் ஆவின் நிறுவனத்துக்கு பாலை விற்பனை செய்கின்றனர். இதனால், ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்க முடியாத நிலை ஏற்படும். மேலும், பேருந்து நிலையத்தில் உள்ள சூடான பால் விற்பனை கடையும்மூடப்பட்டுள்ளது.

சங்கம் லாபத்தில் இயங்குகிறது என்றால் கால்நடை மருத்துவ முகாம், மானிய விலையில் தீவனம்,உறுப்பினர் மற்றும் ஊழியர்களுக்கு வங்கிக் கடன், ஊதிய உயர்வு, தினக்கூலியை உயர்த்தி வழங்கலாம். மேலும், பால் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி தேவையைப் பூர்த்தி செய்யலாம். ஆனால், உள்ளூர் மக்களுக்கான பால் விற்பனையை நிறுத்துவதை ஏற்க முடியாது என்றனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் சரகம்பால்வளம் துணைப் பதிவாளர் சற்குணம் கூறியதாவது: உள்ளூர்மக்களுக்கான பால் விற்பனையை நிறுத்தவில்லை. கோடைக்காலம் என்பதால் பால் உற்பத்தி குறைந்துள்ளது. அதனால், சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். கோடைக்காலம் முடிந்ததும் நிலைமை சீரடையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x