Published : 02 May 2022 06:53 AM
Last Updated : 02 May 2022 06:53 AM

கருணாகரச்சேரி ஊராட்சியில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.7 கோடியில் விரைவில் பாலம் அமைக்கும் பணி: சா.மு.நாசர் தகவல்

கருணாகரச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பூந்தமல்லி: மே தினத்தை முன்னிட்டு, நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கருணாகரச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது, பொதுமக்கள், கருணாகரச்சேரி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், கூவம் ஆற்றில் மணல் திருட்டை தடுக்கவேண்டும், ராஜகுளத்தை தூர்வாரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

பின்னர் பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்ததாவது: கருணாகரச்சேரி ஊராட்சி பகுதியில் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.7 கோடி மதிப்பில் பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. பூந்தமல்லி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் மதிப்பில்குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும், சொட்டு நீர் பாசன திட்டத்தை செயல்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ராஜகுளம் தூர்வாரும் பணி, விரைவில் ஆவடி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும். ரூ.24 லட்சம் மதிப்பில் புதிய மருத்துவமனை கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, அவர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பூந்தமல்லி காய்கறி உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான வேளாண் வாடகைமைய கருவியை வழங்கினார்.

இந்நிகழ்வுகளில், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேசிங்கு, கருணாகரச்சேரி ஊராட்சித் தலைவர் பத்மாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x