Published : 02 May 2022 07:11 AM
Last Updated : 02 May 2022 07:11 AM
சென்னை: தேர்தல் வந்தால் பொய் சொல்லி மக்களை திமுக ஏமாற்றி வருகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட அதிமுக சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் புரசைவாக்கம் தானா தெருவில் நேற்று நடைபெற்றது. அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று, ஏழை தொழிலாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
அதிமுக தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இதில் எம்ஜிஆர் 10 ஆண்டுகள், ஜெயலலிதா 16 ஆண்டுகள், கே.பழனிசாமி 4 ஆண்டுகள் என மொத்தம் 30 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்யும் அதிகாரத்தை மக்கள் வழங்கியுள்ளனர். கடும் உழைப்பு தான் மனிதர்களை நல்ல பாதைக்கு இட்டுச்செல்லும். கடும் உழைப்புக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிறந்த எடுத்துக்காட்டு. கடும் உழைப்பால்தான் இந்த கட்சியை கட்டிக்காத்து இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளனர்.
தேர்தல் வந்தாலே பொய்யை சொல்லி மக்களை திமுக ஏமாற்றி வருகிறது. பொய்கள் மூலமாக ஆட்சியையும் பிடிக்கிறது. ஓராண்டு ஆட்சியையும் நிறைவு செய்கிறது. இந்த ஓராண்டில், நாம் கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கிய திட்டங்கள் முடிந்த நிலையில், அவற்றை திறக்கும் பணியில் தான் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். மக்கள் நலதிட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை.
தேர்தலின்போது பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று பொய்யை சொல்லி வாக்குகளை பெற்றுவிட்டு, அதை இதுவரை நிறைவேற்றவில்லை. அதிமுக செயல்படுத்தி வந்த தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா இருசக்கர வாகன திட்டம் போன்ற ஏழை எளிய மக்கள் மற்றும் பெண்கள் நலதிட்டங்களை திமுக ஆட்சியில் ரத்து செய்துள்ளனர். அதை மக்கள் உணர்ந்துள்ளனர். அதனால்தான் இந்த பொதுகூட்டம் ஏராளமான மக்கள் கூட்டத்தால் மாநாடு போல் காட்சியளிக்கிறது. இந்த கூட்டத்தை பார்க்கும்போது இனி எந்த தேர்தல் வந்தாலும் அதில் அதிமுகதான் வெற்றி பெறும் என்பது உறுதியாகிவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலர் ஆர்.கமலக்கண்ணன், மாவட்ட செயலர்கள் நா.பாலகங்கா, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், ஆதிராஜாராம், பி.சத்யா, எம்.கே.அசோக், விருகை ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT