

உத்தமபாளையம்: விளைச்சல் அதிகரித்துள்ளதால் திராட்சை விலை குறைந்துள்ளது. கிலோ ரூ.40-க்கு தள்ளுவண்டிகளில் சிறு வியாபாரிகள் கூவிக்கூவி விற்பனை செய்கின்றனர்.
தேனி மாவட்டத்தில் சுருளிப்பட்டி, நாராயணத் தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, சின்னமனூர், ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் பன்னீர் மற்றும் விதையில்லா பச்சை திராட்சை விவசாயம் நடை பெறுகிறது.
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் ஆண்டுக்கு மூன்று முறை மகசூல் கிடைக்கிறது. திராட்சை விளைச்சல் தற்போது இப்பகுதியில் அதிகரித்துள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் இருந்து வரும் விதையில்லா பச்சை திராட்சை வரத்தும் அதிக அளவில் உள்ளது.
இதனால் பன்னீர் திராட்சை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது விவசாயிகளிடம் ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்பட்டு ரூ.40-க்கு வியாபாரிகள் தள்ளுவண்டிகளில் கூவிக்கூவி விற்பனை செய்கின்றனர்.
இது குறித்து வியாபாரி சந்திரன் கூறுகையில், ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கருப்பு திராட்சை விளைச்சல் அதிகரித்துள்ளதால் இதன் விலை குறைந்துள்ளது. சில வாரங்களில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பச்சை திராட்சை வரத்து குறைந்து விடும். அப்போது பன்னீர் திராட்சை விலை அதிகரிக்கத் தொடங்கும் என்றார்.