

புதுச்சேரி: ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உத்தரவு இருந்தாலும் அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டிய அரசும், அதிகாரிகளும் ஆய்வே செய்யாமல் உள்ளனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தைப் போன்று புதுச்சேரியி லும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாலீத்தின், பிளாஸ்டிக் தூக்குபைகள், தட்டுகள், ஸ்டைரோபோம், உணவு அருந்தும் மேஜை பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கொடி உட்பட பத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த உத்தரவு வந்து பல ஆண்டுகளானாலும் புதுச்சேரியில் முழுமையாக இதுவரை அரசாலும், அதிகாரிகளாலும் அம லாக்கப்படவில்லை.
குறிப்பாக ஹோட்டல்கள், சாலையோர கடைகள், ஜுஸ் கடைகள், மார்க்கெட், காய்கறி விற்பனை கடைகள் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகளவில் உள்ளது. இப்பிளாஸ்டிக் பொருட்கள் குப் பைகளிலும், கால்வாய்களிலும் தூக்கி வீசப்படுகின்றன. பல இடங்களில் அடைப்புக்கும் இதுவே காரணமாகின்றன. முகத்துவாரத்தில் தேங்கிநிற்கும் கழிவுகளில் பிளாஸ் டிக்கே முதன்மையாக உள்ளன.
இதுதொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், “மக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உருவாக்க அரசு போதிய கவனம் செலுத்துவதே இல்லை. கடைகளுக்கு துணி பைகளை கொண்டு செல்ல அறிவுறுத்த வேண்டும். கடைகளில் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என்று கண்காணிக்க வேண்டும்.
புதுச்சேரியில் 10 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆணையை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு அரசிலுள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, உணவு பாதுகாப்புத்துறை ஆகியவற்றுக்கு உண்டு. தடை ஆணையை மீறுவோருக்கு சுற்றுச்சூழல் விதி 1986-ன்படி தண்டிக்க முடியும். ஆனால் இத்தனை துறைகளில் இருந்து எந்த அதிகாரியும் தங்கள் பகுதிகளுக்கு சென்று கடைகளில் ஆய்வே செய்வதில்லை. இந்நிலை இருந்தால் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாக்க முடியும்?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.