Published : 02 May 2022 06:16 AM
Last Updated : 02 May 2022 06:16 AM

2026-ல் தமிழகத்தில் பாமக ஆட்சி அமையும்: விழுப்புரத்தில் அன்புமணி ராமதாஸ் உறுதி

விழுப்புரம்: பாமக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற மனநிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, பேராசிரியர் தீரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி பேசியது:

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் பாமக ஆட்சி அமையும். ஏனெனில் அரசியல் களம் மாறியுள்ளது. பாமக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற மனநிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. எனக்கு பதவி ஆசை கிடையாது.

10.5 சதவீத இடஒதுக்கீடு என்பது சாதி பிரச்சினை கிடையாது. இது வளர்ச்சிக்கான பிரச்சினை. இதுசம்பந்தமாக நாங்கள் முதல்வரை சந்தித்து பேசியுள்ளோம். அவரும் செய்வதாக கூறியிருக்கிறார், நிச்சயம் செய்வார் என்று நம்புகிறோம் என்றார்.

இதை தொடர்ந்து அவர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், "ஆளு நரும், தமிழக அரசும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டவர்களே. அவர்கள் ரயில் தண்டவாளம் போல இணைந்து செயல்பட வேண்டும் அப்போதுதான் தமிழகத்துக்கு முன்னேற்றம் கிடைக்கும்.

தமிழகத்தில் மின்வெட்டு பெரிதும் பாதித்துள்ளது. இந்திய அளவில் நிலக்கரி தட்டுப்பாடு இருந்தாலும் இதுகுறித்து முன்னரே கணித்து செயல்பட தமிழக அரசு தவறி விட்டது. தமிழகத்தில் மதுவிலக்கை முழுமையாக செயல்படுத்த செயல் திட்டம் கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த தலைமுறை பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில அரசை மத்திய அரசு விலை குறைக்க சொல்வது ஏற்புடையது அல்ல.

தமிழகத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா முழுமையாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் தற்போது காவல்நிலைய மரணங்கள் ஏற்படுவது வேதனை அளிக்கிறது.

இதனை தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்"எனத் தெரிவித்தார்.

ஆளுநரும், தமிழக அரசும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டவர்களே. அவர்கள் ரயில் தண்டவாளம் போல இணைந்து செயல்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x