

மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை சுற்றிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்வேறு பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தினமும் நகர் பேருந்து மூலம் பெரியார் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.
இதன்படி நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கூடம் முடிந்து பேருந்து நிலையத்தில் தாங்கள் செல்லும் பேருந்துகளுக்காக மாணவர்கள் காத்திருந்தனர். அப்போது இருவேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளுக்கு இடையே திடீரென கோஷ்டி மோதல் ஏற்பட்டது. மாணவிகள் இரு பிரிவாகப் பிரிந்து புத்தகப் பைகளுடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளு சம்பவத்தில் ஈடுபட்டனர். இது பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இத்தகவல் அறிந்த திடீர் நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, மாணவிகளை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஏற்கெனவே இரு பள்ளி மாணவிகளிடையே இருந்த ஒரு சில பிரச்சினையால் இந்த மோதல் நடந்திருப்பதும் தெரிய வந்தது.
இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட மாணவிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு சிறப்பு மனநலக் கவுன்சிலிங் அளிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார். மனநல மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் கவுன்சிலிங் அளிக்க இருப்பதாக கல்வித் துறையினர் தெரிவித்தனர்.