Last Updated : 01 May, 2022 06:50 PM

 

Published : 01 May 2022 06:50 PM
Last Updated : 01 May 2022 06:50 PM

சாலை விபத்தில் வாணியம்பாடி இளைஞர் மூளைச்சாவு: ஒன்றரை மணி நேரத்தில் சென்னைக்கு பறந்த இளைஞரின் இதயம்

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞரின் இதயம்

வேலூர்: வாணியம்பாடி அருகே சாலை விபத்தில் சிக்கி வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் மூளைச்சாவு அடைந்ததை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதில், இளைஞரின் இதயம் இன்று ஒன்றரை மணி நேரத்தில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், மதனாஞ்சேரி அடுத்த குந்துக்கால்வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் ரவி (52). இவரது மகன் தினகரன் (21). கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் தினகரன் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு புறப்பட்டார். குடியாத்தம் - பேரணாம்பட்டு வழியாக சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடனே, அவர் மீட்கப்பட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தினகரன் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த தினகரன் இன்று காலை மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, இளைஞரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தார் முன் வந்தனர். இதைதொடர்ந்து, இளைஞரின் இதயம், 2 சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் தானமாக பெறப்பட்டன. உடல் உறுப்புகளின் இதயம் முக்கியமானது என்பதால் அது தேவைப்படும் இடத்துக்கு விரைவாக கொண்டு செல்ல வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு, இதயம் தேவைப்படும் மருத்துவமனை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

விபத்தில் மூளைச்சாவு அடைந்த தினகரன் (கோப்புப்படம்)

அதில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 41 வயதுடைய ஆண் ஒருவருக்கு இதயம் தேவைப்படுவதை அறிந்த சிஎம்சி மருத்துவமனை மருத்துவர்கள் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயத்தை சென்னைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தனர். இன்று மாலை 3 மணிக்கு பிரத்யேக பெட்டியில் தினகரனின் இதயம் பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேலூரில் இருந்து சாலை மார்க்கமாக ஆம்புலன்ஸில் இதயம் கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்தை வேல்முருகன் என்வர் ஓட்டிச்சென்றுள்ளார். இது போன்ற அவசர காலங்களில் உடல் உறுப்புகளை விரைவாக எடுத்துச் செல்வதில் 4 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர் வேல்முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூரில் இருந்து சுமார் 150 கி. மீட்டர் தொலைவுள்ள சென்னைக்கு பொதுவாக பயணிக்க ஏறத்தாழ 3 மணி நேரம் ஆகும். அதிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் கூடுதல் நேரம் ஆகும். ஆனால், இளைஞரின் இதயம் ஒன்றரை மணி நேரத்தில் இன்று சென்னை கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்காக வேலூரில் இருந்து ஆம்புலன்ஸ் செல்லும் பாதையில் வேலூர்- ராணிப்பேட்டை மாவட்ட எல்லை வரை சுமார் 50 க்கும் மேற்பட்ட காவலர்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனம் விரைவாக செல்ல "கிரின் காரிடார்" செயல் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அனைவரின் ஒத்துழைப்பால் வேலூரில் இருந்து 3 மணிக்கு புறப்பட்ட தினகரனின் இதயம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு இன்று மாலை 4.35 மணிக்கு சென்றடைந்தது. அதன்பிறகு, 41 வயதுடைய ஆண் ஒருவருக்கு இளைஞரின் இதயம் வெற்றிக்கரமாக பொருத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதேபோல, இளைஞரின் சிறுநீரகங்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 32 வயதுள்ள ஒரு ஆண், 36 வயதுள்ள ஒரு பெண் ஆகியோருக்கு பொருத்தப்பட்டது. கல்லீரல் 47 வயதுள்ள ஆண் ஒருவருக்கு பொருத்தப்பட்டது. இளைஞரின் கண்களும் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

இது குறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறும்போது, ''மூளைச்சாவு அடைந்த ஒருவரது உடலில் இருந்து இதயம் எடுக்கப்பட்ட 3 மணி நேரத்துக்குள் அந்த இதயம் அடுத்தவரின் உடலில் பொருத்த வேண்டும். இதற்காக பிரத்யேகமாக உள்ள ஐசியு ஆம்புலன்ஸ் போன்ற வாகனம் பயன்படுத்தப்படும். இதில் 2 டெக்னீஷியன்கள் மற்றும் 2 பாராமெடிக்கல் ஊழியர்களுடன் மருத்துவர்களும் இருப்பார்கள். அதன்படி, மூளைச்சாவு அடைந்த ஒருவரின் உடலிலிருந்து இருதயத்தை எடுப்பதற்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் உள்ள இருதய மாற்று அறுவை சிகிச்சை மருத்துவக்குழு முடிவு செய்யும். இதயம் மற்றொருவருக்கு பொருத்தும் தன்மையில் உள்ளதா? ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என இக்குழுவினர் ஆராய்ந்து மருத்துவ அறிக்கை சமர்பித்த பிறகே இருதயம் தானமாக வழங்கப்படும். மூளைச்சாவு அடையும் அனைவரது உடலில் இருந்தும் இதயம் எடுக்கப்பட மாட்டாது.

அதேநேரத்தில், உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக தனியார் மருத்துவமனைகள் அரசிடமிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி பெற்ற மருத்துவமனைகளில் மட்டுமே உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும். உடல் உறுப்புகள் தானமாக பெற விரும்புவோர் அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும் transtan.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது மருத்துவர்கள் மூலமாக பதிவு செய்ய வேண்டும்.

இந்தப் பதிவை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை கவனிக்கும் மருத்துவர்கள் தான் பதிவு செய்ய முடியும். தனிநபர் பதிவு செய்ய முடியாது. இதன் மூலம் பதிவு செய்யப்படும் பதிவுகள் அனைத்தும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கும், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்தில் கண்காணிக்கப்படும். இங்கு பதிவாகியுள்ளவர்களின் காத்திரிப்போர் பட்டியல் அடிப்படையில் தேவை படுவோருக்கு அரசே உடல் உறுப்புகளை ஒதுக்கீடு செய்யும்''. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x