தேர்தல் பறக்கும் படை சோதனையில் அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.10.42 லட்சம் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படை சோதனையில் அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.10.42 லட்சம் பறிமுதல்
Updated on
2 min read

வாழப்பாடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிமுக பிரமுகர் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.10.42 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி தொகுதிக்கு உட்பட்ட அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.பி.மணி. இவர் ஒன்றியக் குழு தலைவராகவும் உள்ளார். இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அலுவலர் மோகன் தலைமையிலான அதிகாரிகள் அவரது வீட்டுக்கு நேற்று சென்றனர். அப்போது, மணியின் மகன் ஜெயபிரகாஷ் கையில் ஒரு பையுடன் வீட்டை விட்டு வெளியேற முயன்றார். அவரை நிறுத்தி அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.

சோதனையில் பையில் ரூ.10 லட்சத்து 42 ஆயிரம் இருந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து ஏற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுந்தரத்திடம் ஒப்படைத்தனர்.

ரூ.2.5 லட்சம் பறிமுதல்

சேலம் முள்ளுவாடி கேட் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன் தினம் இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த கட்டிட கான்டிராக்டர் ஆனந்த் (45) என்பவரிடம் சோதனை செய்தனர். சோதனையில் அவர் ரூ.1.5 லட்சம் பணம் வைத்திருந்தார் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடி அடுத்த சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படை அலுவலர் கந்தசாமி தலைமையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து சேலம் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் காரில் வந்த புதுச்சேரி, மதபெடிபட்டு பகுதியைச் சேர்ந்த சுப்பராயன் என்பவர் ரூ.ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 300 வைத்திருந்தார். மாடு வாங்க பணம் கொண்டு செல்வதாக சுப்பராயன் கூறினார். ஆனால், ஆவணம் இல்லாததால், பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.9.81 லட்சம் பறிமுதல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் நள்ளிரவில் நடந்த வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.9.81 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு நசியனூர் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று முன் தினம் இரவு வாகனச் சோதனை நடத்தினர். நள்ளிரவு 12 மணியளவில் அந்த வழியாக வந்த காரினை சோதனையிட்டபோது, அதில் ஒன்பது லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது.

காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த ஹரிஹரன் (25) என்பதும், தனியார் மசாலா நிறுவனத்தில் விநியோகஸ்தராக பணி புரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். கோவையில் மசாலா வழங்கியதற்கான தொகையை கொண்டு வந்ததாக ஹரிஹரன் தெரிவித்தாலும், அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பதால், அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, ‘கடந்த 12ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் 733 வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு வாகனத்தில் மட்டும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது’ என்றனர்.

பூ வியாபாரி வீட்டில் ரூ.2.49 லட்சம்

தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே அகலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னவீரப்பா. பூ வியாபாரி. இவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, தளி தொகுதி தேர்தல் அலுவலர் தமீமுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அவரது வீட்டில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ரூ.2.49 லட்சம் பணம் இருந்தது. பூ வியாபாரம் செய்த பணம் என சென்னவீரப்பா கூறியள்ளார். ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in